Published : 23 Apr 2023 04:25 AM
Last Updated : 23 Apr 2023 04:25 AM
திண்டுக்கல்: இயற்கை வளம் நிறைந்த சிறுமலையில், சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பாக சுற்றுலாத் துறை மானிய கோரிக்கையில் எந்த அறிவிப்பும் இடம் பெறாததால் திண்டுக்கல் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது இயற்கை எழில் கொஞ்சும் மலையாக சிறுமலை திகழ்கிறது. காலை மற்றும் மாலையில் குளிர்ச்சியான சூழல் நிலவும். இங்கு பழையூர், புதூர், தென்மலை, பசலிக்காடு, தாளக்கடை, குரங்கு பள்ளம் ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. மா, பலா, வாழை, நெல்லி, எலுமிச்சை, சவ்சவ், மிளகு, காபி அதிகளவில் சாகுபடியாகிறது.
அரிய வகை மூலிகைகள், மரங்கள், தாவரங்கள் மற்றும் வெள்ளிமலை சிவன் கோயில் உள்ளது. காட்டு மாடு, குதிரை, மர அணில், காட்டு பன்றிகள் அதிகளவில் வசிக்கின்றன. இங்கு தோட்டக்கலைத் துறையின் பண்ணையும் உள்ளது. வார விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக சுற்றுலா வருகின்றனர்.
திண்டுக்கல்லில் மலைக்கோட்டை, பழநி, கொடைக்கானலைத் தவிர்த்து வேறு பொழுது போக்குகள், சுற்றுலா தலங்கள் இல்லாதது பெரிய குறையாக உள்ளது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமலையை ஒரு நாள் சுற்றுலா தலமாக மாற்ற சுற்றுலாத் துறை திட்டமிட்டது.
கொடைக்கானல் மன்னவனூர் போல் சிறுமலையிலும் சுற்றுச்சூழல் பூங்கா, சிறுவர்கள் பூங்கா, படகு குழாம், மலையேற்றம் (டிரெக்கிங்), பறவைகளைப் பார்த்தல் (பேர்ட் வாட்சிங்), மலைக் கிராம மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், தங்கும் விடுதிகள் போன்றவை அமைக்கவும் முடிவு செய்தனர்.
அதற்கான திட்டம் குறித்து அரசின் ஒப்புதலுக்கு அறிக்கை அனுப்பினர். ஆனால் இதுவரை அத்திட்டத்திற்கு ஏனோ அனுமதி கிடைக்கவில்லை. 2023-ம் ஆண்டு சுற்றுலாத் துறையின் மானியக் கோரிக்கையில் சிறுமலையில் சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பாக புதிய அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் இயற்கை சூழலை அனுபவிக்க விரும்புவோர் சிறுமலைக்குச் சென்று வரலாம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரே ஆறுதலாக வனத்துறையின் பல்லுயிர் பூங்கா அமைந்துள்ளது. இருந்தும் கடந்த 2 ஆண்டுகளாக பணிகள் மட்டுமே நடந்து வருகிறதே தவிர, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இன்னும் வரவில்லை. விரைவில் பூங்காவைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT