Published : 15 Apr 2023 01:02 PM
Last Updated : 15 Apr 2023 01:02 PM

ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் பரிசல் பயணத்துக்கு கூடுதல் கட்டணம் கேட்பதால் வாக்குவாதம்

ஒகேனக்கல்லில் பரிசல் பயணத்துக்கு கூடுதல் கட்டணம் கேட்டதால் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகளை ப லீஸார் சமாதானப்படுத்தினர்.

தருமபுரி: ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் அரசு விதிகளை மீறி பரிசல் பயணத்துக்கு கூடுதல் கட்டணம் கேட்டதால் சுற்றுலாப் பயணிகளுக்கும், பரிசல் ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா கூத்தப்பாடி ஊராட்சியில் காவிரியாற்றங்கரையில் ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் அமைந்துள்ளது. எண்ணெய் மசாஜ், அருவி மற்றும் ஆற்றில் குளித்தல், பரிசல் பயணம் போன்றவை ஒகேனக்கல் சுற்றுலாவில் முக்கிய இடம் வகிக்கும் அம்சங்களாகும்.

இதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஒகேனக்கல்லில் 400-க்கும் மேற்பட்ட பரிசல் ஓட்டிகள் உள்ளனர். பரிசல் இயக்கம் உள்ளாட்சி அமைப்பு மூலம் தனியார் வசம் ஒப்பந்தம் வழங்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. ஒப்பந்த விதிப்படி பரிசல் பயணத்துக்கு வசூலிக்கப்பட வேண்டிய கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு பரிசலில் 5 நபர்கள் வரை மட்டுமே பயணிக்க முடியும். ஒரு நபருக்கு ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். இதில், ரூ.600 பரிசல் ஓட்டுநருக்கான கூலி, ரூ.90 பராமரிப்புக் கட்டணம், ரூ.60 உயிர் காக்கும் சட்டைக்கான(லைஃப் ஜாக்கெட்) கட்டணம் ஆகியவை அடங்கும். ஆனால், பரிசல் ஓட்டிகளில் பெரும்பாலானவர்கள் சுற்றுலாப் பயணிகளிடம் கூடுதலாக பணம் கேட்டு தொல்லை தருவதாக புகார் எழுந்துள்ளது.

நேற்று முன்தினம் கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளிடம், அறிவிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் கேட்டதால் பரிசல் துறையில் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் வந்த பிறகே பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சுற்றுலாப் பயணிகள் சிலர் கூறும்போது, ‘45 நிமிட பரிசல் பயணத்துக்கு ஒரு நபருக்கு ரூ.750 என அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை செலுத்திய பிறகும் ஒரு பரிசலுக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை கூடுதல் கட்டணம் கேட்டு பரிசல் ஓட்டிகள் பிரச்சினை செய்கின்றனர். கூடுதல் பணம் தர ஒப்புக்கொள்ளாவிட்டால், கட்டணம் செலுத்தியிருந்தாலும் கூட அவர்களை பரிசலில் ஏற்றிச் செல்ல முன்வருவதில்லை. இதன்மூலம் சுற்றுலாவுக்காக ஒகேனக்கல்லுக்கு வரவே கூடாது என்ற மனநிலை தான் ஏற்படுகிறது’ என்றனர்.

இதுதொடர்பாக பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீஷ்வரனிடம் பேசியபோது, ‘ஒரு வாரம் முன்பே ஒகேனக்கல்லில் இந்த பிரச்சினை தொடர்பாக புகார் வந்தது. ஒருசில பரிசல் ஓட்டிகள் இவ்வாறு நடப்பதாக தெரிகிறது. ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் சார்பில் 4 சங்கங்கள் உள்ளன.

அதன் நிர்வாகிகளிடம் இதுகுறித்து பேசியபோது, தீர்வு ஏற்படுத்த ஒருவார காலம் அவகாசம் கேட்டுள்ளனர். ஓரிரு நாட்களில் ஒகேனக்கல்லில் அரசு சார்பில் ஒரு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதன்பிறகும் கட்டண விவகாரத்தில் பரிசல் ஓட்டிகள் விதிகளை மீறினால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x