Published : 13 Apr 2023 06:14 AM
Last Updated : 13 Apr 2023 06:14 AM
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் சிறியதும் பெரியதுமாக228 ஏரிகள் அமைந்துள்ளன. இவற்றுள் கடலூர் வண்டிப்பாளையத்தில் இருந்து அரை கி.மீ. தொலைவில் கேப்பர் மலையில், சிறைச்சாலைக்கு எதிரே மூன்று புறம் மலைகள் சூழ இயற்கைப் பேரெழிலுடன் அமைந்திருப்பது கொண்டங்கி ஏரி ஆகும்.
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசஸ்தலங்களில் மலைகள்சூழ ஏரிகள் அமைந்திருப்பது ஆச்சரிய மில்லை. ஆனால், தமிழகத்தின் சமவெளிப்பகுதியில் கடற்கரையோரத்தில் அமைந் துள்ள ஒரு நகரத்தில் சுற்றிலும் மலைகள்சூழ 188 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் ஒரு ஏரி என்பது கடலூரில் மட்டுமே காணக்கிடைக்கும் ஒரு அதிசயம். கடலூர் மாவட் டத்தினர் சிலருக்கு கூட இப்படி ஒரு ஏரி இங்கிருப்பது தெரியாது.
முன்பெல்லாம் வயலுக்கு நீர் பாய்ச்சும் போது மேடான இடங்களில் வாய்க்கால்களில் ஏற்றம் போட்டு இறைப்பதுதான் வழக்கம். ஏற்றம் இறைக்காமலேயே வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்கு இப்பகுதி விவசாயிகளால் ஒரு முறை கையாளப்படுகிறது. விவசாயி கள் பலர் ஒன்று திரண்டு மாலை வேளை யில், குறிப்பிட்ட ஓரிடத்தில் வாய்க்காலின் குறுக்கே செயற்கையாக ஒரு அணையைக் கட்டுவார்கள்.
அதாவது, வாய்க்காலின் குறுக்கேகம்பங்களை நட்டு, அந்தக் கம்பங்களுக் கிடையே குறுக்குக் கழிகளைக் கட்டி அதனிடையே தழைக்கட்டு, வைக்கோல் கட்டு, மணல் முதலானவற்றைப் போட்டுஉயரமாக நிரப்பி வாய்க்காலை அடைப் பார்கள்.
அதன் காரணமாக அந்தச் செயற்கை அணைக்குக் கீழ்ப்புறம் தண்ணீர் போகாமல் மேல்புறமே தேங்கிக் கரைக்கு மேல் வழிந்து வயல்வெளிக்குப் பாயும். இரவு முழுவதும் நீர் பாய்ச்சிவிட்டு காலை யில் இந்த அணையை எடுத்து விடுவார்கள். இந்த முறைக்கு ‘கொண்டம் போடுதல்’ என்று பெயர்.
இந்த ஏரியும் கொண்டம் போட்டது போலத்தான் அமைந்திருக்கிறது. இதன் மேற்கு பகுதியில் மேல் ஏரி உயரத்திலும் கிழக்கு பகுதியில் கீழ் ஏரி தாழ்வாகவும் என இரண்டு பகுதிகளாக இந்த ஏரி அமைந்துள்ளது. இயற்கையாகவே மேல் ஏரி நிரம்பி, கீழ் ஏரிக்கு தண்ணீர் வரும் வகையில் அமைந்துள்ள இந்த ஏரியின் அமைப்பில், மேல் ஏரியின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அதாவது ‘கொண்டம்’ போடப்பட்டுள்ளது. தன்னுள்ளே கொண்டம் கொண்டிருக்கும் இந்த ஏரி ‘கொண்டங்கி’ என அழைக்கப்படுகிறது.
மழைக்காலங்களில் மலையில் இருந்து வழிந்தோடி வரும் நீரால் நிரம்பும் இந்த ஏரிக்கு, கெடிலம் நதியில் திருவந்திபுரம் அணைக்கட்டில் இருந்து பிரியும் ஒரு கிளைக் கால்வாய் வழியாகவும் நீர் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தஏரிக்குள்ளே இயற்கையான பல நீரூற்றுக் களும் அமைந்துள்ளன.
ஒரு காலத்தில் சுற்று வட்டார கிராமங் களின் முக்கிய நீர்ப்பாசன ஆதாரமாக விளங்கிய இந்த ஏரி தற்போது கடலூர் நகரத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. இந்த ஏரியில் போடப்பட்டுள்ள 10-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக கடலூர் புதுநகர் மற்றும் முதுநகர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய் யப்படுகிறது.
இந்த ஏரியின் நீரை கடலூர் மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்யப் பயன் படுத்தலாம் என்று ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திட்டம் வகுக்கப்பட்டது. 1870 மற்றும் 1880-ல் கடலூர் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அலுவலராக இருந்த சர்ஜன் - மேஜர் ஜி. ராபர்ட்சன் என்பவர் தான் கொண்டங்கி ஏரியின் நீரை கடலூர் மக்களின் குடிநீருக்குப் பயன்படுத்த திட்டம் வகுத்தார். இத்திட்டமானது ஆங்கி லேயர் காலத்தில் சென்னை மாகாணத்தில் செயல்படுத்தப்பட்ட பழமையான குடிநீர் திட்டங்களில் ஒன்றாகும்.
18.72 மில்லியன் கன அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க வாய்ப்புள்ள இந்தக்கொண்டங்கி ஏரி இன்றளவும் கடலூர் மக்களின் தாகம் தீர்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த ஏரியை ஆழப்படுத்தி, மேல் ஏரியில்உள்ள அணைக்கட்டை பலப்படுத்தி, மதகுகளைச் சீர் செய்து, இந்த ஏரியின் முழுக்கொள்ளளவிற்கும் நீரைத் தேக்கினால் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் வெகு வாக உயரும். மேலும் ஆண்டு முழுவதும் கொண்டங்கி ஏரியில் நீர் நிரம்பி இருக்கும்.
இதை சுற்றுலாத் தலமாக மாற்றினால், மாநகராட்சிக்கு நல்ல வருவாய் கிடைக்கும். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கடலூர் பொதுமக்களுக்கு சில்வர் பீச்சை போல, மற்றும் ஒரு பொழுது போக்கு இடம் கிடைக்கும்.
இது குறித்து கடலூர், பெரியார் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் நா. சேதுராமன் கூறுகையில், “இந்த ஏரியின் கரைகளை சீர் செய்து, அழகுபடுத்தி சுற்றிலும் பூங்காக்கள் அமைத்து, கொடைக்கானலில் அமைந்திருக்கும் புகழ்மிக்க கோக்கர்ஸ் வாக் போல அழகிய நடைபாதை அமைத்து, ஏரியில் படகுச் சவாரிக்கும் ஏற்பாடு செய்தால் இந்த இயற்கை எழில் கொஞ்சும் கவின்மிகு கொண்டங்கி ஏரி கடலூர் மாவட்ட மக்களை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களையும் கவர்ந்தி ழுக்கும் சுற்றுலா மையமாக மாறும் என்ப தில் எவ்வித ஐயமுமில்லை.
இதுபற்றி பலமுறை, பல கட்டங்களில் பலரால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மாநகராட்சியான நிலையில், கடலூரைஅழகுப்படுத்த அரசு முயற்சிக்கும் இத்த ருணத்தில், இதை நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT