Published : 04 Apr 2023 06:06 AM
Last Updated : 04 Apr 2023 06:06 AM
கொடைக்கானல்: கொடைக்கானல் நகராட்சியில் இலவச மற்றும் கட்டண கழிப்பறைகளில் உள்ள குறைகளை ‘க்யூஆர் கோடு’ மூலம் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் உள்ள பொது மற்றும் சமுதாயக் கழிப்பறைகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அக்கழிப்பறைகள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்து களை தெரிவிக்க ஒவ்வொரு கழிப்பறைக்கும் க்யூஆர் கோடு உருவாக்கப்பட்டது. அவை சம்பந்தப்பட்ட கழிப்பறைகளில் பொருத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 34 இலவச மற்றும் கட்டண கழிப்பறைகளில் க்யூஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளது.
கழிப்பறையை பயன்படுத்தும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து, கழிப்பறை சுத்தமாகவும், பயன்பாட்டுக்கு உரியதாகவும் உள்ளதா?, கைகளை கழுவுவதற்குரிய கிண்ணம் தூய்மையாக உள்ளதா தண்ணீர் வசதி, துர்நாற்றம் வீசுகிறதா கழிப்பறை கதவுகளில் தாழ்ப்பாள் சரியாக உள்ளதா என்பன போன்ற கருத்துகளை (ஆம்/இல்லை) புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.
பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள், கருத்துகள் சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் பரிசீலிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வார விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரும் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதில் கழிப்பறை வசதி முதன்மையானது. க்யூஆர் கோடு மூலம் புகார் தெரிவிப்பதோடு, கழிப்பறை வசதி குறித்து 1 முதல் 5 வரை மதிப்பெண் வழங்கலாம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT