Published : 30 Mar 2023 08:09 PM
Last Updated : 30 Mar 2023 08:09 PM

மத்திய அரசு திட்டத்தில் குமரி கடற்கரை முகப்புப் பகுதி மேம்பாடு: தமிழக சுற்றுலா துறைக்கு விருது

கன்னியாகுமரி கடற்கரையின் முகப்புப் பகுதியை சிறப்பாக மேம்படுத்திய தமிழக சுற்றுலாத் துறைக்கு விருது

புதுடெல்லி: சுவதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரியில் கடற்கரை முகப்புப்பகுதி மேம்பாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு மத்திய அரசு விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘ஒன்றிய அரசின் சுற்றுலா அமைச்சகம் சுற்றுலாத் தலங்களில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு வளமான சுற்றுலா அனுபவத்தை பெறவும், கருப்பொருள் சார்ந்த சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் நோக்கத்தோடு “சுவதேஷ் தர்ஷன்” திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை (மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை), மாமல்லபுரம் கடற்கரை, ராமேஸ்வரம் கடற்கரை, குலசேகரபட்டினம் கடற்கரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி கடற்கரை, திரிவேணி சங்கமம் கடற்கரை, தெற்குறிச்சி கடற்கரை, மணக்குடி கடற்கரை ஆகிய சுற்றுலாத் தலங்கள் தேர்வு செய்யப்பட்டன. இத்திட்டத்தில் ரூ.73.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த கடற்கரை சுற்றுலாத் தலங்களில் நிலச்சீரமைப்பு, மின்விளக்குகள் வசதி அமைத்தல், சுற்றுலா தகவல் மையம், பொது கழிப்பிடங்கள் உருவாக்குதல், நடைபாதை வசதிகள், நடைபாதை மேம்பாடு, கடற்கரை முகப்புப்பகுதி மேம்பாடு, மீட்புப் படகுகள், கடற்கரை சுத்தம் செய்யும் இயந்திரம், ஜெட் ஸ்கி (Jet Ski) படகு, நிலத்திலும் நீரிலும் செல்லும் வாகனம் (Amphicraft), ‘வை-ஃபை’ கம்பியில்லா இணைய அலை வசதி (Wi-Fi), கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், தகவல் பலகைகள், முதலுதவி வசதிகள் ஏற்படுத்துதல் போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

இத்திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி கடற்கரையின் அனைத்து பணிகளுக்கும் கடற்கரை முகப்பு மேம்பாட்டு பணிகள் உட்பட ரூ.12.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டன. இக்கடற்கரை முகப்பு மேம்பாட்டு பணிகள் அங்கு வருகைப்புரியும் சுற்றுலா பயணிகள் கடற்கரையின் அழகை கண்டு ரசிக்கவும் இளைப்பாறவும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.தற்பொழுது இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், 2023 மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் புதுடெல்லியில் ஒருங்கிணைப்பு மற்றும் பொது தனியார் துறை கூட்டாண்மை குறித்த தேசிய பயிலரங்கம் நடைபெற்றது.

இப்பயிலரங்கத்தில், ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி சுவதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரியில் கடற்கரை முகப்புப்பகுதி மேம்பாட்டு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு வழங்கிய விருதினை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர், பி.சந்தரமோகன் பெற்றுக்கொண்டார்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x