Published : 17 Mar 2023 07:24 PM
Last Updated : 17 Mar 2023 07:24 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கான படகு சவாரி கட்டணம் இன்று 50 சதவீதம் உயர்ந்து உடனடியாக அமலுக்கு வந்தது. சாதாரண கட்டணம் ரூ.75 ஆகவும், சிறப்பு நுழைவு கட்டணம் ரூ.300 ஆகவும் உயர்ந்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக கடலுக்குள் அமைந்திருக்கும் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் சென்று வரும் படகு போக்குவரத்து உள்ளது. தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் இந்த படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படகு பயணத்திற்கு சாதாரண கட்டணம், சிறப்பு நுழைவு கட்டணம் என இரு வகை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
சாதாரண கட்டணத்தை பொறுத்தவரை கூட்டம் அதிகமான நேரத்தில் சுற்றுலா பயணிகள் பலமணி நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டியது இருக்கும். அதே நேரம் சிறப்பு நுழைவு கட்டணத்தில் கூட்டம் குறைவாக காணப்படும் என்பதால் பயணிகள் அதிக நேரம் காத்து நிற்காமல் படகு பயணம் மேற்கொள்ள முடியும். இதுவரை சாதாரண கட்டணமாக ரூ.50-ம், சிறப்பு நுழைவு கட்டணமாக ரூ.200-ம் வசூலிக்கப்பட்டு வந்தது. இது இன்று திடீரென உயர்த்தப்பட்டது. எவ்வித முன்னறிவிப்புமின்றி இன்று காலை படகு தளத்தின் நுழைவு வாயில், டிக்கெட் கவுண்டர்களில் கட்டண விவர பலகைகள் மாற்றப்பட்டிருந்தது. அதன்படி சாதாரண கட்டணம் ரூ.75 ஆகவும், சிறப்பு நுழைவு கட்டணம் ரூ.300 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உயர்வு அமலுக்கு வந்தது. இது 50 சதவீத கட்டண உயர்வாகும்.
இதனால் இன்று கன்னியாகுமரிக்கு படகு பயணம் செய்ய சென்ற சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கட்டண உயர்வு 20 சதவீதம் வரை ஏற்றுக்கொள்ளக்கூடியது. இதுவரை இல்லாத அளவில் 50 சதவீதம் கட்டணம் உயர்த்தியுள்ளனர். ஆ
ண்டிற்கு பலகோடி ரூபாய் வருவாய் கன்னியாகுமரி படகு சவாரி மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு கிடைத்து வரும் நிலையில், தற்போது திருவள்ளுவர் சிலைக்கு ரூ.1 கோடி செலவில் நடந்த பராமரிப்பு பணி, மற்றும் படகு தளம் சீரமைப்பிற்கான பணி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான செலவை ஈடுகட்டும் வகையில் சுற்றுலா பயணிகளிடம் இந்த கட்டண உயர்வை திணித்துள்ளதாக சுற்றுலா ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அதிகமாக உயர்த்தப்பட்ட இந்த கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, “கட்டண உயர்வு குறித்து அரசிடம் இருந்து ஏற்கெனவே வந்த ஆணையை தற்போது அமல்படுத்தியுள்ளோம். கன்னியாகுமரியில் சுற்றுலா படகு போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான பணி நடைபெற்று வரும் நிலையில் பன்மடங்கு செலவுகளும் உள்ளது.
அத்துடன் 5 ஆண்டிற்கு ஒருமுறை உயர்த்தப்படும் கட்டண உயர்வு தான் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டிற்க பின்னர் இப்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது என்றனர். இந்நிலையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை கன்னியாகுமரி வருவதை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடாக இன்று மதியத்தில் இருந்து நாளை வரை படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.” என்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT