Published : 13 Mar 2023 04:13 PM
Last Updated : 13 Mar 2023 04:13 PM
மதுரை: மதுரை அருகே இயற்கை எழில் கொஞ்சும் அடர் வனமான அழகர் மலை ‘குட்டி கொடைக்கானல்’ ஆக மாறி வருகிறது. இந்த மலையில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலையும் அமைந்துள்ளதால் வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
வரலாற்று நகரான மதுரையை நான்கு திசைகளிலும் உள்ள திருப்பரங்குன்றம் மலை, ஆனைமலை, நாகமலை, பசுமலை ஆகியவை அரண்போல் பாதுகாக்கின்றன. மலைகள் சுழ்ந்த மாநகரமாக மதுரை திகழ்ந்தாலும், கொடைக்கானல், ஊட்டி போன்று அருகில் உள்ள இந்த மலைகளில் மக்கள் சென்று பொழுதுப்போக்குவதற்கான பிரசித்திப்பெற்ற சுற்றுலா ஸ்தலங்கள் இல்லை. அந்தக் குறையை போக்கும் வகையில், தற்போது மதுரையிலிருந்து 21 கி.மீ., தொலையில் மனதை மயக்கும் இயற்கை எழில் கொஞ்சும் அடர் வனத்துடன் கூடிய சுற்றுலா தலமாக அழகர் மலை மாறி வருகிறது.
இந்த அழகர் மலை அடிவாரத்தில் இருந்து 3 கி.மீ., தொலைவில் மலைப்பாதை வழியாக சென்றால் முருகனின் ஆறாவது அறுபடை வீடான பழமுதிர்சோலை முருகன் கோயில் உள்ளது. மற்றொரு அறுபடை வீடு திருப்பரங்குன்றத்தில் உள்ளது. தமிழகத்திலேயே முருகனின் அறுபடை வீடுகள் இரண்டு உள்ள நகரமாக மதுரை இருப்பது தனிச் சிறப்பு. வாரம் முழுவதும் வாழ்க்கை என்னும் பரப்பபிற்குள் பரபரப்புடன் நாட்களை கழிக்கும் மதுரை மக்களுக்கு, வார விடுமுறை நாட்களில் மனதையும், உடலையும் புத்துணர்வு செய்வதற்கு அருகில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும், மலைப் பிரதேசங்களுக்கு செல்வார்கள்.
மதுரை மக்களுக்கு அப்படியொரு சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் பழமுதிர்சோலை முருகன் கோயில் அமைந்துள்ள அழகர் மலை திகழ்கிறது. இந்த பழமுதிர்சோலை முருகன் கோயிலிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் சபரிமலை படிக்கட்டுகள் போல் உள்ள மலைப்பாதை படிக்கட்டுகளில் நடந்து சென்றால் ராக்காயி அம்மன் கோயிலும், நூபுரகங்கை நீரூற்றையும் காணலாம். பழமுதிர்சோலை முருகன் கோயில் செல்லும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், இந்த நூபுரகங்கை நீரூற்றில் குளிக்காமல் வருவதில்லை.
வார நாட்களில் ஊட்டி, கொடைக்கானல், சிறுமலை செல்ல முடியாத எளிய மக்கள், மதுரைக்கு மிக அருகிலே உள்ள இந்த அழகர் மலையில் உள்ள பழமுதிர் சோலை முருகன் கோயிலுக்கு தற்போது வார விடுமுறை நாட்களில் அதிகளவு செல்லத் தொடங்கியுள்ளனர். சாமிதரிசனம் செய்வதோடு அடர் வனம் வழியாக செல்லும் மலைப்பாதைகளில் வழியாக சென்று கண்ணுக்கு குளிர்ச்சியான மனதிற்கு ரம்மியமான இயற்கை காட்சிகளையும் கண்டு ரசிக்கலாம். சாலைகளில் நடுவே செல்லும்போது ஆங்காங்கே குறுக்கும், நெடுக்குமாக செல்லும் குரங்குகள், பறவைகள் உள்ளிட்ட பல்வகை உயிரினங்களை ரசித்தப்படியே செல்லலாம்.
மலைப்பாதை சாலையில் கொடைக்கானல் போன்ற சூழலை அங்கு காணலாம். இதமான குளிருக்கும், பசியெடுத்தால் ஆங்காங்கே மலைப்பாதைகளில் குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடலாம். இந்த மலையில் ஏராளமான மூலிகைச் செடிகள் உள்ளதால் மூலிகை வாசம் நம் உடலுக்குள் இறங்கிப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். அதனால், இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் மலை மீது உள்ள பழமுதிர் சோலை கோயிலுக்கு வார விடுமுறை நாட்களில் அதிகளவு பலர் நடந்தும் பாதயாத்திரையாக இந்த கோயிலுக்கு செல்கிறார்கள்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்தும், மாட்டுத்தாவணியிலிருந்தும் அழகர் கோயில் செல்லும் பேருந்துகள் அதிகம் உள்ளன. மேலும், அழகர் மலை அடிவாரத்தில் இருந்து பழமுதிர்சோலைக்கு மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலே மலைக்கு செல்வதற்கு ரூ.10, மீண்டும் அடிவாரத்திற்கு வருவதற்கும் ரூ.10-ம் கட்டணம் பெறப்படுகிறது. அதனால், பஸ்களிலும் அதிகளவு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் தற்போது பஸ்களில் வருகிறார்கள். விஷேச நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் பழமுதிர்சோலை செல்கின்றனர். வார விடுமுறை நாட்கள், விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.
மலைப்பாதையில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து அபாயம்: அழகர் மலை அடிவாரத்தில் இருந்து பழமுதிர்சோலை செல்வதற்கு சாலை வசதியிருந்தாலும் சாலைகள் ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து மோசமடைந்துள்ளன. அழகர் மலைப்பாதை சாலையில் ஒரு இடத்தில் கூட தடுப்பு சுவர் அமைக்கப்படவில்லை. அதனால், வாகனங்கள் தடம்புரண்டால் பள்ளத்தில் உருண்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், பஸ்கள், கார்கள் அபாகரமான நிலையிலே மலைப்பாதை வழியாக வந்து செல்கின்றனர். பயணிகள், சுற்றுலாப் பயணிகள் அழகர் கோயில் மலைப்பாதையில் அச்சத்துடனே பயணிக்கின்றனர். பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் மலைப்பகுதியில் போதுமான கழிப்பிட அறை வசதி, உடை மாற்றும் அறை இல்லை. மலைப்பாதை சாலையில் உள்ள மின் விளக்குள் பல எரியாமல் உள்ளன. மலைப்பாதையில் 'யூ' வளைவில் வாகனங்கள் வருவதை 360 டிகிரி அளவில் காட்டும் வாகன பிரதிபலிப்பான் கண்ணாடிகள் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT