Published : 03 Mar 2023 04:03 AM
Last Updated : 03 Mar 2023 04:03 AM
உதகை: உதகை படகு இல்லத்தில் ரூ.5கோடி மதிப்பீட்டில் சாகச விளையாட்டுகளுக்கான கட்டுமானப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் உதகை படகு இல்லத்தில், அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல வகையான சாகச விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதன்படி இழைவரிக்கோடு, மாபெரும் ஊஞ்சல், ரோலர் கோஸ்டர், பங்கீ ஜம்பிங், தொங்குபாலம் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெறவுள்ளன. இதற்கான பூமி பூஜை, கடந்த ஆண்டு படகு இல்லத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் கூறியதாவது: உதகை படகு இல்லத்தில், முதல்முறையாக அட்வென்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் எனப்படும் சாகச விளையாட்டுகள் அறிமுகமாகின்றன. சுற்றுலா பயணிகளிடம் சாகசவிளையாட்டுகள் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. வெளி நாடுகளில் இதுபோன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவார்கள்.
சாகச சுற்றுலாவுக்கான விதிமுறைகள், முதல் முறையாக தமிழக அரசுசார்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. கொல்லிமலை, ஜவ்வாது மலை, ஏலகிரி உள்ளிட்ட இடங்களில் தனியார் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும். தேர்வு செய்யப்பட்ட 5 இடங்களில் உதகை படகு இல்லமும் ஒன்று. இதற்காக ரூ.5 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.
அதில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு 18 சதவீத வருவாய் கிடைக்கும். தற்போது இந்த சாகச விளையாட்டுகளுக்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக படகு இல்லத்தின் இருகரைகளில் அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளை 6 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது சுற்றுலா துறைக்கு பெரிய ஊக்கமளிக்கும்.
இதேபோல, உதகை படகு இல்லத்தில் 3 ஏக்கரில் இயற்கை சூழல் அமைந்த வனப் பகுதியில் சுற்றுலா பயணிகள் டெண்ட் அமைத்து தங்கும் வகையில், ரூ.3 கோடி மதிப்பில் கேம்பிங் திட்டம் செயல்படுத்த உள்ளோம். சாகச விளையாட்டுகளில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். வரும் காலங்களில், படகு இல்ல குளங்களில் படகு வீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT