Published : 08 Feb 2023 02:33 PM
Last Updated : 08 Feb 2023 02:33 PM
மதுரை: மதுரை வண்டியூர் கண்மாயை அழகுபடுத்தி, ரூ.99 கோடி செலவில் சிறந்த சுற்றுலா மையமாக மாற்றும் அறிவிப்பு எம்ஜிஆர் ஆட்சி முதல் ஸ்டாலின் ஆட்சி வரை வெறும் அறிவிப்பாகவே தொடர்கிறது.
மதுரை மாநகரின் மையத்தில், பெரிய ஏரி போல எப்போதும் தண்ணீர் நிரம்பி காணப்படும் வண்டியூர் கண்மாய், சுற்று வட்டாரக் குடியிருப்புகளின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. இக்கண் மாய் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
1982-ம் ஆண்டில் மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் வண்டியூர் கண்மாயை ஆழப்படுத்தி படகு போக்குவரத்து தொடங்கி சிறந்த பொழுதுபோக்கு மையமாக மாற்றப்படும் என அறிவித்தார். ஆனால், தற்போது வரை வண்டியூர் கண்மாயை சிறந்த சுற்றுலா மையமாக மாற்ற அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், கடந்த ஆண்டு ரூ.99 கோடியில் சுற்றுலா திட்டம் செயல்படுத்த பொதுப்பணித் துறையுடன் இணைந்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. அதற்கான முன் தயாரிப்பு பணிகள், அந்த சுற்றுலா மையத்தில் அமையும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவற்றின் வரைபடங் களையும் மாநகராட்சி வெளியிட்டது. ஆனால், தற்போது வரை திட்டம் நிறை வேற்றப்படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இது குறித்து யாகப்பா நகர் மேற்கு குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் அ.இருளாண்டி கூறியதாவது: வைகை ஆற்றில் இருந்து வண்டியூர் கண்மாய்க்கு நிரந்தரமாக வரத்துக் கால்வாய் மூலம் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், கண்மாய் மட்டத்தில் இருந்து வைகை ஆறு 2.5 மீட்டர் பள்ளமாகி விட்ட தால் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டுவர வாய்ப்பில்லை என பொதுப்பணித் துறை கை விரித்துவிட்டது.
வைகை ஆற்றில் தடுப்பணையை அமைத்தால், கால்வாய் மூலம் வண்டியூர் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வரலாம் என வலியுறுத்தப்பட்டது. இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாகத் தெரிவித்தனர். ஆனால், கடந்த 11 ஆண்டுகளாக, இந்தக் கோரிக் கையும் நிறைவேற்றப்படவில்லை.
அதே நேரத்தில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக் குளத்துக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, தற்போது தைப்பூசத் திருவிழாவில் தெப்பத்தில் தேர்ப் பவனி நடக்கிறது. ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி படகுப் போக்குவரத்தும் விடப்பட்டுள்ளது. அதனால், வைகை ஆற்றில் இருந்து வண்டியூர் கண்மாய்க்கு கால்வாயில் தண்ணீர் கொண்டு செல்ல ஏதுவாக தடுப்பணை அமைக்கப்பட்டால் இது சாத்திய மாகும்.
மதுரை மாநகர் மக்களுக்கு ஒரு நாளைக்கு 135 எம்எல்டி தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில் 115 எம்எல்டி மட்டுமே வழங்கப்படுகிறது. மதுரை மாநகர் குடிநீர் தேவைக்கு தற்போது முல்ல பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டாலும், பருவமழை குறை யும்போது அங்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.
அதனால், மாநகராட்சிக்குட்பட்ட வண்டியூர் கண்மாய், நிலையூர் கண்மாய், செல் லூர் கண்மாய், மாடக்குளம் கண்மாய், தென்கால் கண்மாய் உள்ளிட்ட 6 கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதி முழுவதையும் 3 மீட்டர் ஆழப்படுத்தினால், மழைநீரைத் தேக்கி குடிநீர் தேவைக்கு ஓராண்டுக்கும் மேலாகப் பயன்படுத்தலாம்.
ஆனால், தற்போது வண்டியூர் கண் மாயை ஆழப்படுத்தாததால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. கண்மாயை ஆழப்படுத்துவதால் கிடைக்கும் மண்ணை விவசாயப் பயன்பாட்டுக்கும், செங்கல் சூளை, நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தலாம். அதில் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும். வண்டியூர் கண்மாயையும் அழகுபடுத்தி சிறந்த பொழுது போக்கு இடமாக மாற்றலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. விரைவில் சுற்றுலாத் திட்டங்கள் அங்கு தொடங்கப்படும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT