Published : 31 Jan 2023 04:05 AM
Last Updated : 31 Jan 2023 04:05 AM
உதகை: கரோனா பாதிப்புக்கு பின்னர், உதகைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழும் உதகைக்கு இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து, இயற்கையின் அழகை ரசித்து செல்வர். உதகை தாவரவியல் பூங்காவில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறித்து தனி பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட உதகை ஆட்சியர் அலுவலகம், புனித ஸ்டீபன் ஆலயம், தூய இருதய ஆண்டவர் ஆலயம், புனித தாமஸ் ஆலயம் உள்ளிட்ட பாரம்பரிய கட்டிடங்களையும் பார்வையிடுவர். அதேபோல, முன்னோர்களது கல்லறையை பார்வையிட்டு அஞ்சலியும் செலுத்துவதுண்டு.
அத்துடன், தாவரவியல் பூங்காவில் பழமையான கட்டிடம் மற்றும் வெளிநாட்டு மரங்களை பார்வையிடுவதுடன், உதகையில் விளையும் காய்கறிகள், பழங்களையும் ஆர்வமுடன் வாங்குகின்றனர். கரோனா பரவல் காரணமாக, 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. சில நாடுகளில் பரவலை தடுக்க விமானப் போக்குவரத்து தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளால், நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு அளித்தும் வெளிநாட்டினர் வரவில்லை. தற்போது கரோனா பரவல் குறைந்ததால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதகரித்துள்ளது.
அதேசமயம், ரஷியா - உக்ரைன் போர் காரணமாக, எந்த நேரத்திலும் விமானப் போக்குவரத்து தடைபடும் அபாயம் இருப்பதாக கருதி, உதகைக்கு வருவதை வெளிநாட்டினர் தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தோட்டக்கலை அதிகாரிகள் கூறும்போது, "உதகை தாவரவியல் பூங்காவுக்கு 2019-ம் ஆண்டு 3,468 பேர், 2020-ம் ஆண்டு 2,155 பேர் என வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். 2021-ம் ஆண்டு வெளிநாட்டினர் யாரும் வரவில்லை. கடந்த ஆண்டும் குறைவாகவே இருந்தது. தற்போது கரோனா பரவல் பெருமளவு குறைந்திருப்பதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT