Published : 30 Dec 2022 04:30 AM
Last Updated : 30 Dec 2022 04:30 AM

பைக்காரா படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

உதகை: பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் பைக்காரா படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக பெய்த தொடர் மழையால் அணையின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து, தற்போது 80 அடிக்கு நீர்மட்டம் உள்ளது.

படகு இல்லத்தின் படிக்கட்டுகள் வரை தண்ணீர் இருப்பதோடு, தண்ணீர் நீல நிறத்தில் கடல்போல காட்சி அளிக்கிறது. சிறிய மலைக் குன்றுகள், தீவு போல காணப்படும் அணைப் பகுதி, அடர்ந்து வளர்ந்த மரங்களைக் கொண்ட வனப்பகுதி வழியாக படகு சவாரி செய்வது என சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

சில சமயங்களில் கடமான், சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகள் தண்ணீர் அருந்துவதைப் பார்க்கும் வாய்ப்பும் உள்ளது. இதனால் வார விடுமுறை நாட்கள் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் திரண்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது புத்தாண்டு மற்றும் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் வந்து குவிகின்றனர்.

இவர்கள் தாவரவியல் பூங்காவைப் பார்வையிட்ட பின்னர் பைக்காரா படகு இல்லத்துக்கு அதிக அளவில் செல்கின்றனர். இதனால் வார விடுமுறை நாட்களை விட கடந்த2 நாட்களாக கூட்டம் அதிகமாக உள்ளது. இங்கு சவாரி செய்வதற்காக 8 இருக்கைகள் மற்றும் 10 இருக்கைகள் கொண்ட மோட்டார் படகுகள், அதிவேக படகுகள் எனமொத்தம் 26 படகுகள் இயக்கப்படுகின்றன. இதில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் ஆனந்தமாக படகு சவாரி செய்தனர்.

மேலும் செல்ஃபி மற்றும்புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். சவாரியின் போது எழில் மிகுந்த அணை, வனப்பகுதி மற்றும் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளை நேரில் பார்வையிட்டனர். பளிச்சென்று கண்ணாடி போல் தூய்மையாக காட்சியளிக்கும் நீரில் தண்ணீரை கிழித்துக்கொண்டு சீறியபடி சென்ற அதிவேக படகில் பயணம் மேற்கொண்டதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர்.

இதற்கிடையே கடந்த 2 நாட்களாக பகலில் வெயிலான காலநிலை நிலவுவதால், சுற்றுலாபயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால் ஆங்காங்கேபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுசாலைகளில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. உதகையில் நேற்று அதிகபட்சமாக 22 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது. மேலும் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 76 சதவீதமாக இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x