Published : 09 Oct 2022 01:46 PM
Last Updated : 09 Oct 2022 01:46 PM

நீலகிரி மலை ரயிலுக்கு டீசலில் இயங்கும் நீராவி இன்ஜின்: உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட முதல் இன்ஜின்

குன்னூர்

நீலகிரி மலை ரயிலுக்கு திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், டீசலில் இயங்கும் நீராவி இன்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் விரைவில் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா அடையாளம் நீலகிரி மலை ரயில். நூற்றாண்டை கடந்த மலை ரயிலில் பயணிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இத்தகைய பிரசித்தி பெற்ற நீலகிரி மலை ரயில் தினந்தோறும் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு காலையில் இயக்கப்படுகிறது.

மீட்டர் கேஜ் பாதையான நீலகிரி மலை ரயில் பாதையில் சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட நிலக்கரி மூலம் இயங்கும் நீராவி இன்ஜினுடன் இயக்கப்பட்டு வந்தது. நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் குளறுபடிகளால் நீராவி இன்ஜின் இயக்கத்தில் சுணக்கம் ஏற்பட்டது.

இதை நிவர்த்தி செய்யும் வகையில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மலை ரயிலுக்கான நீராவி இன்ஜின் தயாரிக்கப்பட்டது. இந்த டீசலில் இயங்கும் நீராவி இன்ஜின் விரைவில் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே இயக்கப்பட உள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நீலகிரி மலை ரயிலில் பயன்படுத்துவதற்காக திருச்சி பொன்மலை பணிமனையில் புதிய எச்எஸ்டி (அதிவேக டீசல்) ஆயிலில் இயங்கும் நீராவி இன்ஜின் (மீட்டர் கேஜ்) தயாரிக்கப்பட்டது.

திருச்சி பணிமனையில் எச்.எஸ்.டி எண்ணெயில் இயங்கும் நீராவி இன்ஜினைத் தயாரிப்பது இதுவே முதல் முறை. இந்த நீராவி இன்ஜின், நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஹெச்எஸ்டி ஆயிலில் இயங்கும் நீராவி இன்ஜின் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இந்த புதிய ஆயிலில் இயங்கும் நீராவி இன்ஜினை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் பி.ஜி.மல்லையா திருச்சியிலிருந்து வழியனுப்பி வைத்தார்.

இதையடுத்து, இந்த இன்ஜின் பொன்மலை ரயில் பணிமனையிலிருந்து சாலை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தை அடைந்ததும், புதிய இன்ஜின் லாரியில் இருந்து தூக்கி ரயில் பாதையில் நிறுத்தப்பட்டது.

எக்ஸ்-37401 என்ற இந்த புதிய எஞ்சின் 10.38 மீட்டர் நீளமும் 50.3 டன் எடையும் கொண்டது. இன்ஜினில் இரண்டு ஆயில் டேங்க்குகள் உள்ளன. பிரதான தொட்டி 1600 லிட்டர் கொள்ளளவு கொண்டது, பின்புற டேங்க் 725 லிட்டர் தாங்கும் திறன் கொண்டது. தண்ணீர் தொட்டியில் 4500 லிட்டர் தண்ணீர் இருக்கும்.

இந்த இன்ஜினில், நீலகிரி மலைப் பகுதியில் செல்ல பல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிவேக டீசலில் இயங்கும் நீராவி இன்ஜின் சேவையில் சேர்க்கப்படுவதற்கு முன்பு மலைப்பாதையில் விரிவான சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x