Published : 27 Sep 2022 03:41 PM
Last Updated : 27 Sep 2022 03:41 PM

தமிழகத்தில் விரைவில் கேரவன் சுற்றுலா: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

சுற்றுலா வாகனத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மதிவேந்தன்

சென்னை: தமிழகத்தில் கேரவன் சுற்றுலாவிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், வடமேற்கு மாவட்டங்களிலுள்ள சுற்றுலா தலங்களில் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரசித்திபெற்ற 10 சமூக ஊடகவியலாளர்களின் சுற்றுலா வாகனத்தை (Influencers on Wheels) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில், "முதலல்வர் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக அதிகம் முக்கியத்துவம் அளித்து புதுமையான பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அதனை செயல்படுத்தும் விதமாக சாகச சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, உணவுடன் கூடிய உறைவிடம் மற்றும் கேரவன் சுற்றுலா போன்ற திட்டங்களின் வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படவுள்ளன.

தமிழ்நாடு சுற்றுலாத் துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பிரபலமானவர்களின் சமூக வலைதளங்களை அதிக அளவில் மக்கள் பார்வையிடுகின்றனர். அதன் மூலம் அவர்கள் கூறும் கருத்துகள் சமூக ஊடகம் வாயிலாக அதிக நபர்களுக்கு உடனடியாக சென்றடைகின்றது.

அவ்வாறு உள்ளவர்களில் பத்து நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை சுற்றுலாத் துறை ஊக்குவித்து தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் அதிகம் பிரபலமடையாத சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு தமிழக சுற்றுலாத் தலங்களின் சிறப்புகள் குறித்து அறிந்து கொள்வதன் மூலம் அவர்கள் பார்வையிட்ட இடங்களின் விவரங்களை தங்களது சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரபலப்படுத்துகின்றனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 வலைதள பிரபலங்கள் ஒவ்வொருவருக்கும் சுமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பின் தொடர்பவர்களாக உள்ளனர். சமூக ஊடகங்களில் பிரபலமான 10 சமூக ஊடகவியலாளர்கள் ஜவ்வாது மலை, ஒகேனக்கல், கொல்லிமலை, பூச்சமருதூர் (கோவை), சேத்துமடை, வால்பாறை, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இதன்மூலம் இச்சுற்றுலாத் தலங்கள் பிரபலமடைந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகைதர வழிவகுக்கும்" என்று அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x