Last Updated : 14 Sep, 2022 08:05 PM

 

Published : 14 Sep 2022 08:05 PM
Last Updated : 14 Sep 2022 08:05 PM

மூணாறு மலைச் சாலையில் பரவும் மூடுபனியை ரசித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்

பெரியகானல் பகுதி மலைச்சாலையில் பரவிய மூடுபனியால் உற்சாகத்தில் ஆடி மகிழ்ந்த இளைஞர்கள். படம்: என்.கணேஷ்ராஜ்.

போடி: மூணாறு மலைச்சரிவுகளில் அதிகளவில் மூடுபனி உருவாகி சாலைகளின் பல இடங்களிலும் பரவுகின்றன. இந்த வித்தியாசமான சூழலால் கவரப்படும் சுற்றுலாப் பயணிகள் அதனை ஆர்வத்துடன் ரசித்து மகிழ்கின்றனர்.

இடுக்கி மாவட்டம் மூணாறில் ஆண்டின் பல மாதங்கள் இதமான பருவநிலை இருந்து வருகிறது. குளிர், பனி போன்றவற்றுடன் அவ்வப்போது சாரல்மழையும் பெய்வதால் மலைச்சரிவுகளில் தேயிலை, ஏலக்காய் போன்ற விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. மேலும் மூணாறைச் சுற்றிலும் உள்ள அணைகளில் படகுசவாரி, பசுமையான பள்ளத்தாக்கு, பூங்கா, மலையேற்றம், நீர்வீழ்ச்சி போன்ற பொழுது அம்சங்களும் அதிகம் உள்ளன.

மழையால் கடந்த இரண்டு வாரங்களாக சுற்றுலா வர்த்தகம் பாதித்திருந்த நிலையில் தற்போது மழையின்றி குளிர் பருவநிலை நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது.

மழைக்குப்பின்பான குளிர்பருவநிலையால் பலபகுதிகளிலும் மூடுபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக போடிமெட்டு-மூணாறு வழித்தடமான ஆனையிரங்கல், சின்னக்கானல், தேவிகுளம், லாக்கார்டு உள்ளிட்ட பகுதிகளில் மூடுபனிகள் அவ்வப்போது சாலைகளில் வெகுவாய் பரவி வருகிறது.

மூணாறு அருகே லாக்கார்டு பள்ளத்தாக்கை மேவிய மூடுபனி சாலையில் பரவுகிறது. படம்: என்.கணேஷ்ராஜ்

இதனால் வாகனங்கள் பகலிலும் முகப்புவிளக்கை எரியவிட்டபடி பயணிக்கின்றன. தரைப்பகுதியின் வெப்பசூழ்நிலையில் வாழ்ந்த சுற்றுலாப் பயணிகள் பலருக்கும் இந்த பனிச்சூழல் கொண்டாட்ட மனோநிலையை ஏற்படுத்துகிறது. இதனால் பலரும் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி மூடுபனியில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும் பனிக்குள் நின்று வீடியோகால் மூலம் உறவினர்களுடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர்.

இது குறித்து வாகனஓட்டிகள் கூறுகையில், ”சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த வித்தியாசமான சூழல் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் சிலர் சாலைகளில் புகைப்படம் எடுப்பதால் ஓட்டுநர்களுக்கு இடையூறையும், விபத்து ஏற்படும் சூழலையும் உருவாக்குகிறது. ஆகவே பாதுகாப்புடன் இப்பகுதியை ரசிக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x