Published : 21 Aug 2022 10:13 AM
Last Updated : 21 Aug 2022 10:13 AM
மெரினா கடற்கரை, ஜெமினி மேம்பாலம், கிண்டி கத்திபாரா, கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவை அந்தக் காலம் தொடங்கி தற்போது வரை சென்னையின் அடையாளமாக இருந்து வருகின்றன. ஆனால், சென்னை தற்போது சென்னை சிங்கார சென்னையாக மாறி வருவதால் சென்னையில் அடையாளங்களும் மாறிகொண்டே வருகிறது. குறிப்பாக, இந்தப் புதிய அடையாளங்கள் சென்னை மக்களின் மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு இடங்களாகவும் மாறி வருகின்றன.
கத்திபாரா நகர்ப்புற சதுக்கம்: இப்படி சென்னையில் புதிய அடையாளமாக மாறிய இடங்களில் முதல் இடம், கத்திபாரா நகர்ப்புற சதுக்கத்திற்குதான். சென்னை மக்களின் முக்கியப் பொழுதுபோக்கு இடமாக மாறியுள்ளது கத்திபாரா நகர்புற சதுக்கம். சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் கீழ் பகுதியில் ரூ.14.50 கோடியில் வணிக வளாகம், சிறுவர் பூங்கா, உணவு மையம் உட்பட பல்வேறு அம்சங்களுடன் இந்த நகர்ப்புற சதுக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 5.38 லட்சம் சதுரஅடி பரப்பளவில் உள்ள இந்த நகர்ப்புற சதுக்கம் பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாக மாறியுள்ளது. குறிப்பாக கிண்டி, சைதாப்பேட்டை போன்ற புறநகருக்கு அருகில் உள்ள பொதுமக்கள் வார இறுதி நாட்களில் மெரினா கடற்கரை உள்ளிட்ட நகருக்கு உள்ளே இடங்களுக்கு வருவதை தவிர்த்துவிட்டு நகர்புற சதுக்கத்தில் பொழுதைக் கழித்து வருகின்றனர்.
ஓஎம்ஆர் சாலையோர பூங்கா: இந்தப் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது ஓஎம்ஆர் சாலையோர பூங்கா. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஓ.எம்.ஆரில் கஸ்துாரிபாய் நகர், இந்திராநகர், திருவான்மியூர் உள்ளிட்ட பறக்கும் ரயில் நிலையங்களுக்கு கீழே உள்ள பகுதிகள் சீரமைக்கப்பட்டு பொது மக்களுக்கு ஏற்ற இடமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் 2 கி.மீ நீளத்திற்கு ரூ.20 கோடியில் நடைபாதை, சைக்கிள் பாதை, மூலிகைத் தோட்டம், உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பூங்காவில் காலை மற்றும் மாலை பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்தப் பூங்கா சில நாட்களுக்கு முன்பு ‘சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா பூங்கா’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் நகர்ப்புற சதுக்கம்: சென்னை நகரின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை சென்ட்ரல் நகர்ப்புற சதுக்கம் இந்தப் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இதில் அழகிய செடிகள், நீரூற்றுகள், 500 கார்கள், 1,500 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், சுரங்கப்பாதை வழியாக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கும், சாலையை கடக்கவும் பொதுமக்கள் சிரமமின்றி செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமரும் வகையில் கான்கிரீட் பெஞ்சுகள் போடப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் 31 மாடி சென்ட்ரல் பிளாசா பணிகள் நிறைவடைந்தால், இது சென்னை மிகப் பெரிய முனையமாக மாறும்.
வில்லிவாக்கம் தொங்கு பாலம்: இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத காரணத்தால் இந்தப் பட்டியலில் 4-வது இடம் பிடித்துள்ளது வில்லிவாக்கம் தொங்கு பாலம். 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட வில்லிவாக்கம் ஏரியை மறு சீரமைப்பு செய்து பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.
ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.37 கோடி செலவில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏரியின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு செல்லும் வகையில் 250 அடியில் தொங்கு பாலம் ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொங்கு பாலம் நடைபாதை முழுவதும் கண்ணாடியில் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் இதன் மேலே நடந்து செல்லும்போது தண்ணீரை ரசித்துக்கொண்ட செல்லும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் இரு கரைகளிலும் தண்ணீருக்கு மிக அருகில் உணவகங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதைத் தவிர்த்து மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை, தி.நகர் ஆகாய நடைபாதை, ஜெமினி மேம்பாலம் சீரமைப்புத் திட்டம், தண்ணீருக்கு கீழ் மெட்ரோ ரயில் ஆகியவையும் வருங்காலத்தில் சென்னையில் அடையாளமாக மாற வாய்ப்பு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT