Published : 19 Aug 2022 09:00 AM
Last Updated : 19 Aug 2022 09:00 AM
இன்று உலக புகைப்பட தினமாக கடைபிடிக்கப்படுகிறது. பல பக்க வார்த்தைகளை ஒரு புகைப்படம் உணர்த்திவிடும். இதனால், உலக முழுவதும் புகைப்படத்துக்கு சிறப்பிடம் உள்ளது.
செல்பி வந்துவிட்ட பின்னர், சாமானிய மனிதர்களுக்கு புகைப்பட ஆர்வம் மோலோங்கியுள்ளது. புகைப்படம் எடுக்க தேவைப்படும் கேமராக்களுக்காக பிரத்யேகமாக உதகையில் நிரந்தரமாக ஒரு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. உதகையிலுள்ள தனியார் கேளிக்கைப் பூங்காவில்தான், இந்த கேமரா கண்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
1880-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான நவீன கேமரா வரை 2,500-க்கும் மேற்பட்ட கேமராக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சிலவற்றின் வரலாறு ருசிகரமானவை.
இரண்டாவது உலகப்போரின்போது, போர்முனையில் பயன்படுத்தப்பட்ட ஜப்பான் நாட்டில் உருவாக்கப்பட்ட மிஷின் கன் வடிவிலான மூவி கேமரா வைக்கப்பட்டுள்ளது. இது வேறு எங்கும் காண முடியாதது. கேமராக்கள் பயன்பாட்டுக்கு வந்தபோதே, உளவு பார்ப்பதற்கான ஸ்பை கேமராக்களும் உருவாக்கப்பட்டுவிட்டன.
ஜேம்ஸ்பாண்டு திரைப்படங்களில் பார்த்துள்ள பிஸ்டல் வடிவிலான கேமரா, சிகரெட் லைட்டர், கைக்கடிகாரம் ஆகியவற்றில் இணைக்கப்பட்டுள்ள கேமராக்களும் இங்குள்ளன. அதேபோல், லண்டன் தயாரிப்பான ஒரே கிளிக்கில் ஸ்டாம்பு அளவிலான 15 படங்களை எடுக்கும் ராயல் மெயில் ஸ்டாம்ப் கேமரா, அமெரிக்க தயாரிப்பான பெட்ரோமாக்ஸ் விளக்கு வடிவிலான புரொஜக்டருடன் கூடிய கேமரா, திரைப்படம் எடுப்பதைப்போல ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு விதமான பாவனைகளுடன் கூடிய படம் எடுப்பதோடு, அதை கேமரா அமைந்துள்ள மொபைல் இருட்டறையிலேயே பரிசோதித்து பிரிண்ட் போடும் வசதியுடன் கூடிய லண்டன் தயாரிப்பான பாலிகிராப் கேமரா உள்ளிட்டவை வேறு எங்குமே காண முடியாதவை.
நீல் ஆம்ஸ்டிராங் நிலவுக்குச் சென்றபோது, தன்னுடன் எடுத்துச் சென்ற ஸ்வீடன் தயாரிப்பான ஆசின் பிளேடு, ஜெர்மனியின் விலை உயர்ந்த லைக்கா, தங்க முலாம் பூசப்பட்டு உருவாக்கப்பட்ட நிக்கான் உள்ளிட்டவற்றோடு தற்போதைய நவீன கேமராக்கள் வரை இங்குள்ளன. இவை அனைத்தும் பயன்படுத்தப்படும் நிலையில் உள்ளது என்பதுதான் இதன் சிறப்பம்சம். இந்த கேமராக்களோடு அமெரிக்காவின் தயாரிப்பான 35 எம்.எம். மூவி கேமராவான மிச்சல் திரைப்படக் கேமராவும் உள்ளது.
இவை மர்மயோகி, நாடோடி மன்னன் போன்ற திரைப்படங்களைப் படமாக்கியவை. இவற்றின் பழமை மாறாமல் பாதுகாக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அருங்காட்சியக நிர்வாகி பாபு கூறும்போது, "இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கேமராக்களுடன், உலகின் மிகப்பெரிய கேமராவான 17 அடி நீளமுள்ள மாமூத் கேமராவின் மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. இயங்கும் நிலையிலுள்ள இந்த கேமராவிலிருந்து புகைப்படம் எடுத்து தரும் அளவுக்கு வசதி உள்ளது.
இதுபோன்ற அம்சங்கள் இங்கு வரும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளைவிட, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவர்ந்து வருகிறது" என்றார்.
1901-ம் ஆண்டில் சிகாகோவில் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த ஒரு ரயிலின் முழு நீளத்தையும் படமாக்குவதற்காக உருவாக்கப்பட்டதுதான் மாமூத் கேமரா என்பது குறிப்பிடத்தக்கது. உதகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், பார்வையாளர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT