Published : 02 Apr 2025 02:34 PM
Last Updated : 02 Apr 2025 02:34 PM

இ-பாஸ் முறையை ரத்து செய்ய கோரி நீலகிரியில் முழு கடையடைப்பு - சுற்றுலா பயணிகள் தவிப்பு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய கோரி அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காரணமாக கடைகள் ஏதுமில்லாததால் சுற்றுலா பயணிகள் உணவு கிடைக்காமல் தவித்தனர்.

நீலகிரி, கொடைக்கானல் உட்பட்ட சுற்றுலா தளங்களுக்கு செல்ல நேற்று (ஏப்.1) முதல் ஜூன் மாதம் இறுதி வரை என மூன்று மாதத்துக்கு இ-பாஸ் முறையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து அமல்படுத்தியுள்ளது. இதில் வார நாட்களில் 6,000 வாகனங்களும், வார இறுதியில் 8,000 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள 14 சோதனை சாவடிகளிலும் உயர் நீதிமன்றம் அறிவித்த எண்ணிக்கையின் அடிப்படையில் இ-பாஸ் சோதனை மேற்கொண்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்துக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹோட்டகள், தனியார் தங்கும் விடுதிகள், சிறு, குறு வணிக நிறுவனங்கள் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுவதாக கூறி இ-பாஸ் புதிய நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.

சோதனை என்ற பெயரில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுகிறது என அபராதங்கள் விதிப்பது, கடைகளுக்கு சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகள் தவிர்க்க வேண்டும் உட்பட 12 அம்ச முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஏப்.2) நீலகிரி மாவட்டம் முழுவதும் அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் முழு கடையடைப்பு, பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் உணவகங்கள், உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன ஓட்டிகள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் உதகை, குன்னூர், கோத்தகிரி கூடலூர், பந்தலூர் உட்பட்ட நகரப் பகுதிகள் முற்றிலும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில், ரம்ஜான் விடுமுறை காரணமாக சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இன்று முழு அடைப்பு காரணமாக கடைகள் ஏதுமில்லாததால் சுற்றுலா பயணிகள் உணவு கிடைக்காமல் தவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x