Last Updated : 29 Mar, 2025 05:54 PM

 

Published : 29 Mar 2025 05:54 PM
Last Updated : 29 Mar 2025 05:54 PM

ஏப்.1 முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள்: கொடைக்கானில் சுற்றுலா பாதிக்குமா?

போக்குவரத்து நெரிசல் காரணமாக கொடைக்கானல் மலைச்சாலையில் பல கி.மீ., தூரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

கொடைக்கானல்: ‘இ-பாஸ்’ நடைமுறையை தொடர்ந்து, ஏப்.1-ம் தேதி முதல் வாகன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து, தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கொடைக்கானல் மக்கள், வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கொடைக்கானலில் சீசன் காலங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மலைச்சாலையில் பல மணி நேரம் நகராமல் அணிவகுத்து நிற்பதுண்டு.

இதனால் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலை அரைகுறையாக பார்த்து விட்டு பாதியிலேயே திரும்பும் நிலைதான் இருந்தது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 2024 மே 7-ம் தேதி முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கோடை சீசனில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணி களால் நிரம்பி வழியும் கொடைக்கானல் களையிழந்து வெறிச்சோடியது.

விண்ணப்பித்த அனைவருக்கும் ‘இ-பாஸ்’ வழங்கப்பட்டாலும், இந்த கட்டுப்பாடு காரணமாக கொடைக்கானல் வரும் வெளிமாநில சுற்றுலாப் பயணி களின் வருகை முந்தைய ஆண்டுகளைவிட, கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது. அதனால் சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையே ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில் எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிப்பது என்பது குறித்து சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐஎம் சார்பில் ஆய்வு மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய வாகன கட்டுப்பாடுகள்: அந்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய தாமதமாகும் என்பதால் கோடை விடுமுறையின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையிலும் புதிதாக வாகன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்களை மட்டுமே இயக்க வேண்டும். உள்ளூர் வாகனங்கள், விவசாய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படுகிறது. அதே சமயம், அரசு பேருந்துகளில் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை.

இந்த புதிய கட்டுப்பாடுகளை ஏப்ரல் 1 முதல் ஜூன் 30-ம் தேதி வரை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு, கொடைக்கானல் மக்களுக்கு மேலும் இடி விழுந்தது போல் ஆகியுள்ளது. கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகளால் சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பியுள்ள தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் வாகன கட்டுப்பாடு திட்டத்தை கைவிட வேண்டும் என்று கொடைக்கானல் மக்கள், சுற்றுலா தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அப்துல்கனி ராஜா

விற்பனைக்கு வந்த தங்கும் விடுதிகள்: கொடைக்கானல் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்துல்கனி ராஜா: கரோனா காலத்தை நினைவுபடுத்துவது போல், இ-பாஸ் நடைமுறையால் கடந்த ஓராண்டாக சுற்றுலாப் பயணிகளை நம்பியுள்ள அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது ஏப்.1 முதல் புதிய வாகன கட்டுப்பாடு என்பது கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்களுக்கு பதிலாக 8,000 வாகனங்களை அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு கொடைக்கானல் மக்களுக்காக நீதிமன்றத்தில் போராடி, இ-பாஸ் மற்றும் புதிய வாகன கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் தங்கும் விடுதிகளை தொடர்ந்து நடத்த முடியாமல் விற்பனை செய்யும் நிலைக்கு வந்து விட்டனர். இதே நிலை நீடித்தால் கொடைக்கானலை விட்டு இடம்பெயரும் சூழல் உருவாகும். சுற்றுலாப் பயணிகள் வருகை, சுற்று லாவை நம்பித்தான் கொடைக்கானல் மக்கள் உள்ளனர். இந்த கட்டுப்பாடுகள் காரணமாக பிழைப்பை நடத்துவது சிரமம். அதனால் கொடைக்கானல் மக்களுக்கு மட்டும் சொத்து வரியை 50 சதவீதமாக குறைக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம், என்றார்.

அப்பாஸ்

அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கட்டுப்பாடு: கொடைக்கானலைச் சேர்ந்த சாக்லேட் வியாபாரி அப்பாஸ்: புதிய வாகன கட்டுப்பாடு சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. ஏற்கனவே, இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகளின் வருகையும், சுற்றுலா தொழிலாளர்கள், வியாபாரிகளின் வருவாய் பாதியாக குறைந்து விட்டது. வழக்கமாக சீசன் காலங்களில் இருக்கும் வியாபாரம்கூட குறைந்து விட்டது. இந்நிலையில் புதிய வாகன கட்டுப்பாட்டால் வியாபாரிகளின் நிலை கேள்விக்குறிதான்.

இது போன்ற கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு பதிலாக, முக்கிய பிரச்சினையாக கூறப்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உடனடியாக மாற்றுச் சாலை திட்டம், கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றுலா இடங்களில் வாகன நிறுத்தும் வசதிகள் போன்ற தேவையான போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிப்பது என்பது குறித்த ஆய்வு இன்னும் முடியாத நிலையில் வாகன கட்டுப்பாடு தேவையில்லாதது.

கொடைக்கானல் நகருக்குள் நுழைய மலைச்சாலையில்
வரிசையில் காத்திருந்த வாகனங்கள். படங்கள்: நா.தங்கரத்தினம்

மூணாறு, தேக்கடி போன்ற மற்ற மாநிலங்களில் உள்ள சுற்றுலாத்தலங்களில் எல்லாம் கட்டுப்பாடுகளை விதிப்பதற்குப் பதிலாக தேவையான போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்துவதில்தான் கவனம் செலுத்து கிறார்கள். கொடைக்கானலுக்கு விதிக்கும் தொடர் கட்டுப்பாடுகளால், வியாபாரிகளுக்கு மட்டுமின்றி சுற்றுலா மூலம் அரசுக்கும் வருவாய் குறையும்.

கட்டுப்பாடுகள் விதிக்கும்போது சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருவதை தவிர்த்து விட்டு, அண்டை மாநிலங்களில் உள்ள வேறு சுற்றுலா இடங்களுக்கு செல்ல நேரிடும். ஆகவே, இ-பாஸ் மற்றும் புதிய வாகன கட்டுப்பாடுகளை ரத்து செய்து, சுற்றுலாப் பயணிகள் எப்போதும் போல வந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x