Published : 16 Mar 2025 06:04 PM
Last Updated : 16 Mar 2025 06:04 PM

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: இதமான காலநிலையை அனுபவித்தனர்

கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத்தலமான குணாகுகை பகுதியில் குவிந்த சுற்றுலாபயணிகள்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மார்ச் துவக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், கடந்த வாரம் இரண்டு தினங்கள் கனமழை பெய்தது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்த மழையால் வெயிலின் தாக்கத்தில் இருந்த வனப்பகுதியில் இருந்து இயற்கையாக வளர்ந்த மரம், செடிகள் மீண்டன. இதனால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ரம்மியமான சூழ்நிலை நிலவிவருகிறது.

இரண்டு நாட்கள் மழைக்கு பிறகு மீண்டும் தரைப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியதையடுத்து மக்கள் கொடைக்கானலுக்கு செல்ல துவங்கினர். இதனால் வாரவிடுமுறை தினமான இன்றும், நேற்றும் கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா என வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் அதிகம் காணப்பட்டனர்.

கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத்தலமான தூண்பாறை பகுதியை கண்டு களித்த சுற்றுலாப் பயணிகள்

பிரையண்ட் பூங்காவில் மே இறுதியில் நடைபெறவுள்ள மலர் கண்காட்சிக்கான பூச்செடிகள் நடவுசெய்யும் பணிகள் நடைபெற்றுவருவதால் பூக்கள் இன்றி காணப்பட்ட பூங்காவை காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டவில்லை. குணாகுகை, தூண்பாறை, மோயர்பாய்ண்ட், பசுமைப்பள்ளத்தாக்கு ஆகிய சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் காணப்பட்டனர்.

நட்சத்திர ஏரியில் படகுகள் ஓட்டியும், ஏரிச்சாலையில் குதிரைசவாரி செய்தும், சைக்கிள் ஓட்டியும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர். கொடைக்கானலில் அதிகபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. குறைந்தபட்சமாக இரவில் 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. காற்றில் ஈரப்பதம் 72 சதவீதம் இருந்ததால் இரவில் லேசான குளிர் உணரப்பட்டது. கொடைக்கானலில் இதமான காலநிலையை சுற்றுலாபயணிகள் அனுபவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x