Published : 13 Mar 2025 06:53 PM
Last Updated : 13 Mar 2025 06:53 PM

ஊட்டி, கொடைக்கானலில் எத்தனை சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி? - ஐகோர்ட் விதித்த புதிய நிபந்தனைகள்

கோப்புப்படம்

சென்னை: வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து புதிதாக நிபந்தனைகளை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில் எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிப்பது என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் சார்பில் ஆய்வு மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆய்வுகள் முடிந்து அறிக்கை தாக்கல் செய்ய காலதாமதம் ஏற்படும் என்பதால் கோடை விடுமுறையின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் சுற்றுலா வாகனங்களை அனுமதிப்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “இந்த விவகாரத்தில் கோடை விடுமுறையில் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொடைக்கானல் மலையில் 50 இருக்கைகள் கொண்ட பேருந்துகளை இயக்க தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கடந்த டிசம்பரில் உத்தரவிட்டுள்ளார். ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்களை இயக்கலாம்? என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் ஆய்வுகள் முடிவடைய இன்னும் 9 மாதங்கள் ஆகும்,” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், “ஐஐடி, ஐஐஎம் ஆய்வு முடிவுகள் வரும் வரை எதிர்வரும் கோடை காலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையிலும் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையில் புதிதாக கட்டுப்பாடுகளை விதிக்கிறோம். அதன்படி ஏற்கெனவே உள்ள இ-பாஸ் நடைமுறைப்படி ஊட்டிக்கு வார நாட்களில் தினமும் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வார இறுதியான சனி, ஞாயிறு நாட்களில் தினமும் 8 ஆயிரம் வாகனங்களை அனுமதிக்கலாம்.

அதேபோல, கொடைக்கானலுக்கு வார நாட்களில் தினமும் 4 ஆயிரம் வாகனங்களையும், வார இறுதி நாட்களில் தினமும் 6 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். உள்ளூர் வாகனங்கள் மற்றும் விவசாயப் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல அரசு பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலமாக ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் பயணிகளுக்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது. சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

இந்த புதிய கட்டுப்பாடுகளை வரும் ஏப்.1-ம் தேதியில் இருந்து வரும் ஜூன் 30-ம் தேதி வரை கண்டிப்பான முறையில் மாவட்ட நிர்வாகங்கள் அமல்படுத்த வேண்டும். அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை வரும் ஏப்.25 அன்று தாக்கல் செய்ய வேண்டும். இந்த புதிய கட்டுப்பாடுகளை நிறைவேற்றும் வகையில் தேவையான கூடுதல் போலீஸாரையும் பணியமர்த்த வேண்டும். ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் மின்சார வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.25ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x