Published : 15 Jan 2025 04:23 PM
Last Updated : 15 Jan 2025 04:23 PM
நாகர்கோவில்: பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக, கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று (ஜன.15) முதல் ஜன. 17-ம் தேதி வரையிலான 3 நாட்களுக்கு படகு போக்குவரத்து 4 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் உள்ளன. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று இவற்றை பார்த்து வரும் நிலையில் கடந்த டிச. 30-ம் தேதி கண்ணாடி இழை பாலம் திறக்கப்பட்ட பின்னர் அவற்றை பார்ப்பதற்காக வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறைக்கு சென்று வரும் வகையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு போக்குவரத்து காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன்,விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கலை் பண்டிகை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், சபரிமலை மகர விளக்கு பூஜை முடிந்ததாலும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கன்னியாகுமரியில் அலைமோதி வருகிறது.
சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை கண்டு களித்து செல்ல வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இன்று (ஜன.15) முதல் 17-ம் தேதி வரை மூன்று நாட்கள் படகு போக்குவரத்து நேரத்தை நீட்டி 4 மணி நேரம் கூடுதலாக நீட்டித்துள்ளது. அதன்படி மூன்று நாட்களும் படகு சேவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி நடைபெறவுள்ளது.
இன்று கன்னியாகுமரியில் படகில் செல்வதற்காக அதிகாலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். சன்னதி தெருவில் 3 மணி நேரத்துக்கு மேல் காத்து நின்ற பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், கடற்கரை சாலை பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment