Published : 02 Jan 2025 05:51 PM
Last Updated : 02 Jan 2025 05:51 PM
ஏலகிரி: ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரிக்கு செல்லும் மலைப்பாதையில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஆங்காங்கே விபத்துகள் நேரிடுவதாக சுற்றுலா பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பொதுமக்கள் நலன் கருதி, மலைப்பாதை முழுவதும் மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஏலகிரி மலை உள்ளது. ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எப்போதும் ஒரே சீதோஷ்ணநிலை இருப்பதால் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுகிறது. இது மட்டுமின்றி ஏலகிரி மலை பகுதியில் உள்ள குக்கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்களும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மலையடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை அதாவது 14 கொண்டை ஊசி வளைவுகளில் போதிய மின் விளக்கு வசதி இல்லாததால் மலைப்பாதை முழுவதும் இருளில் மூழ்கியுள்ளன. மலைக்கு வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த ஆங்காங்கே வேகத்தடை அமைக்கப்பட்டிருப்பதால் மின்விளக்கு வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள் வேகத்தடை மீது ஏறி கீழே விழுந்து விபத்தில் காயமடைந்து வருவதாக கூறுகின்றனர்.
இது குறித்து சுற்றுலாப் பயணிகள் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘ஆண்டு முழுவதும் ஏலகிரி மலையில் சீசன் இருப்பதாலும், இங்கு வருவதற்கான செலவு மிக குறைவு என்பதால் ஏலகிரி மலைக்கு திருப்பத்தூர் மட்டுமின்றி வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
உள்ளூர் மாவட்ட மக்கள் பகலில் வருகிறார்கள். வெளிமாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மாலை மற்றும் இரவு தான் இங்கு வந்து சேர முடிகிறது. இருசக்கர வாகனங்கள், கார்கள் மூலம் வரும் சுற்றுலாப் பயணிகள் மின்விளக்கு வெளிச்சம் இல்லாததால் பாதை தெரியாமல் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, நிலாவூர் செல்லும் சாலையில் பல மின்கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் ஒன்றில் கூட மின்விளக்கு பொருத்தப்படவில்லை.
அதேபோல, மேட்டுகனியூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் மின்விளக்கு வெளிச்சம் இல்லாததால் இரவு நேரங்களில் பேருந்து மூலம் வரும் சுற்றுலாப் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் தவிர, மலையில் வசித்து வரும் மக்களும் பல்வேறு தேவைகளுக்காக அதிகாலை நேரங்களிலும், இரவு நேரங்களில் மலையை விட்டு கீழே வரும் போதெல்லாம் விளக்கு வெளிச்சம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால், மலைப்பாதையில் பல இடங்களில் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. பலர் காய மடைந்து வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் மலைப்பாதை முழுவதும் ஈரப்பதம் காணப்படுகிறது. ஆங்காங்கே வேகத்தடையும் அமைக்கப்பட்டிருப்பதால் வெளிச்சம் இல்லாமல் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக மலைப்பாதை முழுவதும் மின்விளக்குகள் பொருத்தி மலையை ஒளிரச்செய்ய வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது’’ என்றனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கேட்டபோது, ‘‘ஏலகிரி மலைக்கு செல்லும் பொன்னேரி கூட்டு சாலையில் மின் கோபுர விளக்குகள் சமீபத்தில்தான் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல, மலைப் பாதையிலும் மின்விளக்குகள் உள்ளன. இதில், ஒரு சில விளக்குகள் எரியாமல் இருக்கலாம். அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மின்விளக்கு இல்லாத இடங்களில் மின்விளக்குகள் பொருத்த மின்வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT