Last Updated : 01 Jan, 2025 06:15 PM

 

Published : 01 Jan 2025 06:15 PM
Last Updated : 01 Jan 2025 06:15 PM

குமரியில் புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!  

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக ஆர்வத்துடன் காத்து நின்ற சுற்றுலாப் பயணிகள்.

நாகர்கோவில்: கன்னியாகுமரி வந்த சுற்றுலாப் பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை மேகமூட்டத்தால் காணமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். ஆங்கில புத்தாண்டையொட்டி கன்னியாகுமரியில் நேற்றில் இருந்து சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. 2024-ம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை குமரி சூரிய அஸ்தமன மையத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர்.

கன்னியாகுமரி முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அதிகாலையில் 2025-ம் ஆண்டின் முதல் சூரிய உதய காட்சியைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ஆனால் பனி, மற்றும் மேகமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் வழக்கமாக காலை 6.40 மணியளவில் தெரியும் சூரிய உதயம் 7.15 மணியளவிலும் தென்படவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்து நின்று சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

பின்னர் காலை 7.30 மணியளவில் மேகக் கூட்டத்துக்கு மத்தியில் சூரியன் தெளிவின்றி தென்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் புத்தாண்டைக் கொண்டாட திரண்டிருந்த வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், தியாகப் பெருஞ்சுவர், ராமாயண தரிசன சித்திர கண்காட்சிக் கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, திருப்பதி வெங்கடாசலபதி கோவில், மற்றும் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களில் இன்று காலையிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா மையங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x