Published : 29 Dec 2024 02:33 PM
Last Updated : 29 Dec 2024 02:33 PM
இந்திய ரயில்வேயின் பொறியியல் அற்புதமாகத் திகழும் செனாப், அஞ்ஜி ரயில் பாலங்கள் வழியாக, வரும் ஜனவரியில் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் பாலங்கள் வழியாக ரயில்களில் செல்லும்போது, சுற்றுலாப் பயணிகளுக்கு பிரமிப்புடன் கூடிய புதிய அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் வடஎல்லை மாநிலமான காஷ்மீரில் இருந்து கடைக்கோடியில் உள்ள கன்னியாகுமரி வரை தடையில்லாத போக்குவரத்து வசதி ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, உதம்பூர் -ஸ்ரீநகர்- பாராமுல்லா ரயில் இணைப்புகடந்த 1999-ம் ஆண்டு திட்டமிடப்பட்டு, பல்வேறு கட்டமாக நடைபெறுகிறது.
தற்போது, இத்திட்டம் பல்வேறு பெரிய சவால்களை கடந்து நிறைவடையும் தருவாயில் உள்ளது. இவற்றில் செனாப் பாலம், அஞ்ஜி பாலம் ஆகியவை முக்கியத்துவம் பெற்றுள்ளன. காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில், ரியாசி - சங்கல்தான் இடையே செனாப் ஆற்றுக்கு மேலே இரும்பு கம்பிகளாலான பிரம்மாண்ட செனாப் பாலம் ரூ.1,486 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்டும் பணி 2012-ம் ஆண்டு தொடங்கி நடப்பாண்டில் நிறைவடைந்தது.
467 மீட்டர் நீள வளைவு தூண்: இப்பாலத்தின் கட்டுமானப் பணிகளை கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் ஆலோசனை முகவராக இருந்து செயல்படுத்தியது. இப்பாலப் பணியில் 467 மீட்டர் நீளம் கொண்ட வளைவு தூணை ஆற்றின் இருபக்கங்களில் இருந்து பாலத்துடன் இணைப்பது பெரும் சவாலாக இருந்தது.
இதுகுறித்து கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் துணை தலைமை பொறியாளர் மல்லிக் கூறும்போது, “இப்பணியில் 2,200 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கடும் குளிருக்கு மத்தியில் 24 மணி நேரமும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த பாலத்தில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் ரயில்கள் செல்ல முடியும். இப்பாலம் 120 ஆண்டுகள் தாங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் குளிர் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை தாங்கக்கூடியது” என்றார்.
அஞ்ஜி பாலம், ரியாசி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. கத்ரா - பெனிகால் இடையே அஞ்ஜி ரயில் பாலம் நடுவில் பிரம்மாண்ட தூண்களுடன் இருபுறமும் 96 ராட்சத இரும்பு கம்பிகளால் இணைக்கப்பட்ட தொங்குபாலமாக அமைந்துள்ளது. இந்த பாலம் 725.5 மீட்டர் நீளம் கொண்டது. ரூ.435 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்துக்கு மத்தியில் 193 மீட்டர் நீளத்தில் ஒற்றை தூண் மூலமாக அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
பெரும் சவால்: இப்பாலம் குறித்து கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் தலைமை பொறியாளர் சுஜய்குமார் கூறும்போது, “இப்பாலப் பணி 2018-ம் ஆண்டு தொடங்கி, இந்த ஆண்டு நிறைவடைந்தது. இந்த பாலத்தில் நடுவில் பெரிய தூண் அமைத்து, கேபிள்கள் மூலமாக நிலைநிறுத்துவது பெரிய சவாலாக இருந்தது” என்றார்.
கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டதால், வரும் ஜனவரியில் ரயில் சேவை தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வடக்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி நிதி பண்டே சிங் கூறும்போது, ‘‘இத்திட்டத்தில் 17 கி.மீ. தொலைவுக்கான புதிய பாதையில் கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டன. ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனை நடைபெறுகிறது. இது முடிந்த பிறகு, நேரடி ரயில்சேவை தொடங்கும்.
குறிப்பாக, டெல்லி - ஸ்ரீநகருக்கு தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் இருந்து இரவு இந்த ரயில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை ஜம்மு வந்துவிடும். அங்கிருந்து ஸ்ரீநகருக்கு ரயில் புறப்படும்.
போகும்வழியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அஞ்ஜி, செனாப் ரயில் பாலத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்லலாம். அவர்களுக்கு பிரமிப்புடன் புதிய அனுபவத்தைக் கொடுக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT