Published : 27 Dec 2024 06:24 PM
Last Updated : 27 Dec 2024 06:24 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் திறப்பு விழாவுக்குத் தயாராக உள்ள கண்ணாடி கூண்டு பாலம் இரவு நேரத்தில் மின்னொளியில் ஜொலித்து வருகிறது.
கன்னியாகுமரியின் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறையின் அருகே மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. திருவள்ளுவர் பாறை பகுதியில் கடும் கடல் சீற்றம், கடல் நீர்மட்டம் தாழ்வு போன்றவை அடிக்கடி நிகழ்வதால் விவேகானந்தர் பாறைக்கு மட்டும் சென்று வரும் சுற்றுலா பயணிகள், பெரும்பாலான நாட்களில் திருவள்ளுவர் பாறைக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு தினமும் சென்று வரும் வகையில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் பாறைக்கு இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் நெடுநாளாக கோரிக்கை வைத்தனர். இந்த பாலம் அமைவதால் விவேகானந்தர் பாறைக்கு படகு சாவாரி மூலம் செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து நேரடியாக நடந்தே திருவள்ளுவர் பாறைக்கு செல்ல முடியும்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் ரூ.37 கோடி செலவில் 77 மீட்டர் நீளத்திற்கு திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி கூண்டு நடைபாலம் அமைக்கப்பட்டு வந்தது. இந்த பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். பாலப்பணிகள் நிறைவடைந்த நிலையில் நடுவில் உள்ள துல்லியமாக கண்ணாடி நடைப்பகுதி அமைக்கும் பணி இறுதியாக நடைபெற்று வருகிறது.
திறப்பு விழா காணவுள்ள கண்ணாடி கூண்டு நடைபாலம் இரவு நேரத்தில் தத்ரூபமாக அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டு மின்னொளியில் ஜொலித்து வருகிறது. அவ்வப்போது பல வண்ணங்கள் மாறி மாறி வருவதால் கடலுக்குள் மாயாஜாலம் நிகழ்ந்தது போன்ற உணர்வை கரையில் நிற்கும் சுற்றுலாப் பயணிகள் உணரமுடிகிறது. புத்தாண்டை வரவேற்கும் வகையில் விரைவில் திறப்புவிழா காண இருக்கும் கண்ணாடி கூண்டு பாலம் மின்னொளியில் ஜொலிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT