Published : 26 Dec 2024 11:11 AM
Last Updated : 26 Dec 2024 11:11 AM
வேடந்தாங்கல் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பெய்த கனமழையால் பறவைகள் சரணாலய ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வரும் நிலையில், சரணாலயத்துக்கு வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து சீசன் தொடங்கியுள்ளதால், உள்ளூர் வாசிகள் மற்றும் சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில், பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் சீசன் தொடங்குவது வழக்கம். இதையடுத்து, ஏராளமான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக சரணாயலத்துக்கு வந்து, ஏரியில் உள்ள மரங்களில் கூடுகட்டி முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்யும்.
மேலும், குஞ்சுகளுடன் மீண்டும் பறவைகள் தாய்நாடு திரும்புவது வழக்கமாக உள்ளது. ஏரியில் தங்கியுள்ள பறவைகளை கண்டு ரசிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பறவை ஆர்வலர்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வேடந்தாங்கல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் போதிய மழையில்லாததால் சரணாலய ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல் குறைந்தளவே நீர் காணப்பட்டது.
இதனால், நவம்பர் மாதத்தில் குறைந்த அளவிலேயே பறவைகள் வந்தன. தற்போது, ஃபெஞ்சல் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வேடந்தாங்கல், வெள்ளப்புத்தூர் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்து 16 அடி கொள்ளளவு கொண்ட ஏரி முழுமையாக நிரம்பியது. மேலும், ஏரியிலிருந்து உபரி நீர் கலங்கல் வழியாக வெளியேறி வருகிறது. ஏரியில் நீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிப்பதால் வலசை பறவைகள் சரணாலயத்துக்கு திரும்பி வருகின்றன.
இதில், ஆஸ்திரேலியா, சைபிரீயா, இலங்கை, நியூசிலாந்து, கனடா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் வந்துள்ளன. இதில், கரண்டிவாயன், நீர்வாத்து, கூழைக்கடா, பாம்புத்தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், நீர்காகம், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, புள்ளி மூக்கு வாத்து, வக்கா உட்பட பல்வேறு பறவைகள் வந்துள்ளன. மேலும், மரக்கிளைகளில் கூடு கட்ட தொடங்கியுள்ளதால் பறவைகள் சீசன் தொடங்கியுள்ளதாக உள்ளூர் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, வேடந்தாங்கல் கிராம மக்கள், சிறு வியாபாரிகள் கூறியதாவது: கனமழையால் ஏரி நிரம்பியுள்ளது. பறவைகளுக்கான உணவுகள் அதிகம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சரணாலய ஏரிக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மரக்கிளைகளில் கூடு கட்ட தொடங்கியுள்ளதால் உணவுக்காக வெளியே சென்று மீண்டும் கூட்டுக்கு திரும்பும். இதனால், பறவைகளை அவ்வப்போது ஏரியில் பார்க்க முடியும் என்பதால் சீசன் தொடங்கியுள்ளதாக கருதுகிறோம்.
மேலும், பறவைகளை கண்டு ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால், தின்பண்டங்களை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் வருவாய் கிடைக்கும் என மகிழ்ச்சியில் உள்ளனர். எனினும், சுற்றுலாப்பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளதால், அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
இதுகுறித்து, வேடந்தாங்கல் சரணாலய வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சரணாலய ஏரி முழுவதும் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. அதனால், சரணாலயத்துக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் ஏரியில் தங்கியுள்ளதால் சீசன் தொடங்கியுள்ளது.
வரும் நாட்களில் பறவைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். பறவைகள் அதிகளவில் சரணாலயத்தில் உள்ளதால், வனத்துறை சார்பில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவலர்கள் மூலம் ஏரியை சுற்றிலும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT