Published : 16 Dec 2024 07:25 PM
Last Updated : 16 Dec 2024 07:25 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்டத்துக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் விழா பந்தல் அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி கடல்நடுவே விவேகானந்தர் பாறை அருகே உள்ள மற்றொரு பாறையில் கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு அதை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். கன்னியாகுமரியின் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக திகழும் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை பார்க்க படகில் செல்லும் சுற்றுலா பயணிகள் அடிக்கடி கடல் சீற்றம், கடல்நீர்மட்டம் தாழ்வு போன்றவற்றால் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் விவேகானந்தர் பாறைக்கு செல்வோர் அனைவருமே திருவள்ளுவர் சிலைக்கும் சென்று வரும் வகையில் ரூ.37கோடி செலவில் கடல்சார் கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
இப்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்த நிலையில், திருவள்ளுவர் சிலை அமைத்து வெள்ளி விழா வருகிற ஜனவரி 1-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி வெள்ளிவிழா நிகழ்ச்சி கொண்டாட்டங்கள் வருகிற 30, மற்றும் 31ம் தேதிகளில் நடைபெறுகிறது. அப்போது கண்ணாடி இழை இணைப்பு பாலமும் திறக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான விழா ஏற்பாடுகள் கன்னியாகுமரியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா மையங்கள் வர்ணம் அடித்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்துக்கான நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்காக பந்தல் அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. 10,000 பேருக்கு மேற்பட்டவர்கள் அமரும் வகையில் இருக்கைகள் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 10 நாளில் பந்தல் அமைக்கும் பணி நிறைவடையும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதைப்போல் கன்னியாகுமரி, மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சாலை, மற்றும் சுற்றுப்புறங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT