Published : 16 Dec 2024 01:10 AM
Last Updated : 16 Dec 2024 01:10 AM
கோவை: தமிழகத்தில் 40 வழித்தடங்களுக்கான மலையேற்றக் கட்டணம் 25 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
2018-ல் தேனி மாவட்டம் குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி மலையேற்றம் சென்ற 23 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மலையேற்றத்துக்கு வனத் துறை தடை விதித்தது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்கை பற்றிய புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் மலையேற்றத்துக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வனத் துறை ‘ஆன்லைன் ட்ரெக்கிங் டிரெயில் அட்லஸ்’ மூலம் 40 மலையேற்ற வழித்தடங்களுக்கான இணையதளத்தை (www.trektamilnadu.com) உருவாக்கியுள்ளது. கடந்த நவ. 1-ம் தேதி முதல் முன்பதிவு செய்து, மலையேற்றத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். மலையேற்றப் பாதைகள் எளிதான, மிதமான மற்றும் கடினமானவை என 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
40 மலையேற்ற வழித்தடங்கள்... தமிழகத்தில் மொத்தமுள்ள 40 மலையேற்ற வழித்தடங்களில் நீலகிரியில் 10, கோவையில் 7 மற்றும் திருப்பூரில் ஒரு மலை யேற்ற வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, திண்டுக்கல், சேலம், தேனி, நெல்லை, தென்காசி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மலையேற்ற வழித்தடங்கள் உள்ளன.
மலையேற்றத்தில் நபர் ஒருவருக்கு ரூ.599-ல் தொடங்கி அதிகபட்சமாக ரூ.5,099 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எளிதான பிரிவில் ரூ.599 முதல் ரூ.1,449, மிதமான பிரிவில் ரூ.1,199 முதல் ரூ.3,549, கடினமான பிரிவில் ரூ.2,799 முதல் ரூ.5,099 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கட்டணத்துடன் 5 சதவீதம் ஜிஎஸ்டி-யை கூடுதலாக செலுத்த வேண்டும். மலையேற்றம் மேற்கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கும் காப்பீடு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மலையேற்ற வழித்தடத்துக்கு அறிவிக்கப்பட்ட கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும், கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் இயற்கை ஆர்வலர்களும், மலையேற்றம் செல்வோரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மலையேற்றத்துக்கான கட்டணத்தை 25 சதவீதம் குறைத்து வனத் துறை அறிவித்துள்ளது. எளிதான பிரிவுக்கு ரூ.539 முதல் ரூ.1,299, மிதமான பிரிவில் ரூ.1,019 முதல் ரூ.3,019, கடினமான பிரிவில் ரூ.2,099 முதல் ரூ.3,819 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓசை அமைப்பு தலைவர் காளிதாசன் கூறும்போது, “மலையேற்றக் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், மலையேற்றத்துக்கு செல்வோர் கொண்டாட்ட மனநிலையிலோ அல்லது சாகச மனநிலையிலோ வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது. இயற்கை பற்றிய புரிதல், உணர்தல் என்ற மனநிலையில் மலையேற்றம் செல்ல வேண்டும்” என்றார்.
கட்டணம் மாறுபட வாய்ப்பு உள்ளது: வனத்துறையினர் கூறும்போது, “கர்நாடகா போன்ற மாநிலங்களில் சீசன் காலங்களில் கட்டணச் சலுகை அறிவிக்கப்படுகிறது. அதேபோல, தமிழகத்தில் கட்டணச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மலையேற்றத் திட்டம் புதுமையானது என்பதால், இயற்கை ஆர்வலர்களின் வருகை உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு கட்டணம் மாறுபட வாய்ப்புகள் உள்ளன” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT