Published : 02 Dec 2024 12:29 AM
Last Updated : 02 Dec 2024 12:29 AM
உதகையில் உள்ள கர்நாடக அரசுக்குச் சொந்தமான தோட்டக்கலைத் துறைப் பூங்காவில் முதல்முறையாக குளிர்கால மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கர்நாடக மற்றும் தமிழக முதல்வர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சுற்றுலாத் தலமான உதகைக்கு தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து செல்கின்றனர்.
உதகை ஃபர்ன்ஹில் பகுதியில் கர்நாடக அரசின் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பூங்கா அமைந்துள்ளது. சுமார் 38 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து கிடக்கும் இந்தப் பூங்காவில் தோட்டக்கலைத் தோட்டம், ரோஜா தோட்டம், இத்தாலியத் தோட்டம், தேயிலைத் தோட்டம், பிரமைத் தோட்டம் எனப் பல்வேறு பிரிவுகள் உள்ளன.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக, தமிழக தோட்டக்கலை துறை பூங்காக்களில் மலர் கண்காட்சி நடத்தப்படுவதைப்போல, கர்நாடக பூங்காவிலும் இந்த ஆண்டு முதல்முறையாக குளிர்கால மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: இந்தப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், ஆர்கிட், சைக்ளோமன், ரெனன் குலஸ், டியூபெரஸ், பிகோனியா, கிரைசாந்திமம், மேரிகோல்டு உள்ளிட்ட 200 ரகங்களில், 5 லட்சம் மலர்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. பசுமைக் குடிலில், 20 ஆயிரம் பூந்தொட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
பூங்காவில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம், மையப் பகுதியில் அமைந்துள்ள மலர் நீர்வீழ்ச்சி ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. கட்டணமாக சுற்றுலாப் பயணி ஒருவருக்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது. உதகையின் பல இடங்களில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இங்கு ‘பார்க்கிங்’ கட்டணம் கிடையாது.
குளிர்கால சீசனுக்காக பூங்கா சிறப்பாக தயார் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. வார நாட்களில் 6 ஆயிரம், வார இறுதி நாட்களில் 12 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பூங்காவை பார்வையிட வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை மேலும் கவருவதற்காக இந்த ஆண்டு முதல்முறையாக குளிர்கால மலர் கண்காட்சி இம்மாதம் 3-வது வாரத்தில் நடத்தப்பட உள்ளது. இதில், கர்நாடக மற்றும் தமிழக முதல்வர்கள் கலந்துகொள்ள அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT