Published : 28 Nov 2024 07:19 PM
Last Updated : 28 Nov 2024 07:19 PM

ராமேசுவரம் முதல் தனுஷ்கோடி வரை சுற்றுலா பயணிகளுக்காக சிஎன்ஜி பஸ்களை இயக்க நடவடிக்கை

ராமேசுவரம் முதல் தனுஷ்கோடி வரை இயக்கப்பட உள்ள சிஎன்ஜி பேருந்து (மாதிரி படம்)

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை சுற்றுலாப் பயணிகளுக்காக இயற்கை எரிவாயுவால் (சிஎன்ஜி) இயங்கக்கூடிய பேருந்துகளை இயக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ராமேசுவரம் என்றாலே ஆன்மிக தலம் என்ற நிலை மாறி, தற்போது ஆன்மிகம் கலந்த சுற்றுலா தலமாக மாறி வருகிறது. குறிப்பாக கடற்கரை சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, சூழல் சுற்றுலா என பல்வேறு வகைகளில் ராமேசுவரம் தீவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இங்குள்ள ராமநாத சுவாமி கோயில், ராமர் பாதம், கோதண்டராமர் கோயில், அக்னி தீர்த்தக் கடற்கரை, ராமர், லெட்சுமண, வில்லூண்டி தீர்த்தங்கள், பாம்பன் பாலம், தனுஷ்கோடி, நீர் பறவைகள் சரணாலயம், வங்காள விரிகுடாவும், மன்னார் வளைகுடாவும் ஒன்றாகச் சங்கமிக்கும் அரிச்சல்முனை பகுதி, பாம்பன் பாலம், விவேகானந்தர் நினைவிடம், அப்துல் கலாம் தேசிய நினைவகம். ஆபில்-ஹாபில் தர்ஹா உள்ளிட்ட பல்வேறு இடங்களை காண்பதற்காகவும் ஆண்டுதோறும் 4 கோடி சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆன்மிக பக்தர்கள் வந்து செல் கின்றனர்.

ஆனால், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ராமேசுவரம் பேருந்து நிலையம், ரயில் நிலையத்திலிருந்தும் போதுமான பேருந்து வசதிகள் இல்லை. இதனால் சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களுக்கு செல்ல தனியார் வாகனங்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களையே நம்பி இருக்கும் நிலை உள்ளது. தனியார் வாகனங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்கிற அதிக கட்டணத்தை கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சிறப்பு சுற்றுலாப் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு), எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) எனப்படும் இயற்கை எரிவாயுக்கள் மூலம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதனடிப்படையில் சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையில், தற்போது 7 போக்குவரத்துக் கழகங்களில் தலா 2 பேருந்துகள் வீதம் 14 பேருந்துகள் சிஎன்ஜி மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.

அதுபோல ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி, ராமேசுவரத்திலிருந்து பாம்பன் வரையிலும் சுற்றுலாப் பயணி களின் வசதிக்காக சிஎன்ஜி மூலம் இயங்கக்கூடிய 7 பேருந்துகள் இயக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் தொடங்கி, சீதா தீர்த்தம், லெட்சுமணத் தீர்த்தம், ராமர் தீர்த்தம், அக்னித் தீர்த்தம், கலாம் இல்லம், ரயில் நிலையம், கலாம் நினைவிடம், பாம்பன், கோதண்டராமர் கோயில், முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி அரிச்சல்முனை ஆகிய வழித் தடங்களில் இயக்கப்படும். இதற்கு ஒருமுறை மட்டும் பயணச்சீட்டை பயன்படுத்தி காலை 6 மணி தொடங்கி இரவு 9 மணி வரையிலும் எந்த நிறுத்தத்திலும் ஏறி இறங்கிக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x