Last Updated : 15 Nov, 2024 07:33 PM

 

Published : 15 Nov 2024 07:33 PM
Last Updated : 15 Nov 2024 07:33 PM

கன்னியாகுமரியில் சபரிமலை சீசன்: பொங்கல் பண்டிகை வரை பல லட்சம் பேர் குவிய வாய்ப்பு

குவியும் மக்கள்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் நாளை துங்குகிறது. இந்நிலையில், வருகிற ஜனவரி 19-ம் தேதி வரை பொங்கல் முடியும் வரை நடைபெறும் சீசன் காலத்தில் பல லட்சம் பேர் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி ஐய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும். ஐய்யப்ப பக்தர்களின் சீசன் காலமான இந்நாட்களில் தான் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களும் வருகின்றன.

பண்டிகை கால தொடர் விடுமுறைகளிலும் ஏராளமானோர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருவர். இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை ஐய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி ஐய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். மேலும் டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும். இது தவிர ஜனவரி மாதம் மகர விளக்கு தரிசனத்தையொட்டியும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே இந்த 3 மாத காலமும் கன்னியாகுமரியில் சீசன் களை கட்டும்.

கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. கார்த்திகை 1ம் தேதியான நாளை முதல் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்குகின்றனர். இதையொட்டி கன்னியாகுமரியில் ஐய்யப்ப பக்தர்கள் சீஸன் நாளை துவங்குகிறது. இந்த சீசன் ஜனவரி மாதம் 19-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐய்யப்ப பக்தர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முன்னேற்பாடுகளை செய்து வருவதாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீசனையொட்டி கன்னியாகுமரியில் இரவு நேரத்திலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள். சீசனையொட்டி 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஐய்யப்ப பக்தர்கள் சீஸன் காலத்திலே கன்னியாகுமரியில் அதிக ஐய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சீஸன் காலத்தில் பல லட்சம் பக்தர்கள் கன்னியாகுமரியில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் வசதி செய்யப்பட உள்ளது. பாதுகாப்பு பணியில் அதிகமானபோலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு தனி பார்க்கிங் வசதி ஏற்பாடும் செய்யப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x