Published : 12 Nov 2024 06:40 PM
Last Updated : 12 Nov 2024 06:40 PM
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல நவம்பர் 18-ம் தேதி முதல் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார்.
சர்வதேச சுற்றுலா நகரமான கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் வரும் அளவுக்கு அதிகமான வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, கடந்த மே 7 முதல் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது. சுற்றுலா வாகனங்கள் மட்டுமின்றி கொடைக்கானலில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. இதன் காரணமாக கொடைக்கானலுக்கு வரவே சுற்றுலாப் பயணிகள் தயங்குகின்றனர்.
இந்நிலையில், கொடைக்கானலில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த செப்.26-ம் தேதி வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் கொடைக்கானல் நட்சத்திர ஏரிப் பகுதி வரை முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதே நேரத்தில், நீளமான பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, நவ.18-ம் தேதி முதல் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்கள் கொடைக்கானல் செல்லும் மலைப் பாதைகளின் தொடக்கப் புள்ளியை தாண்டி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி,"பொது நலன் கருதியும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் கொண்ட பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் கொடைக்கானல் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு நவ.18-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது" என ஆட்சியர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT