Last Updated : 16 Oct, 2024 06:28 PM

 

Published : 16 Oct 2024 06:28 PM
Last Updated : 16 Oct 2024 06:28 PM

கன்னியாகுமரியில் கடல் சீற்றத்தால் சுற்றுலா பயணிகளுக்கு தடை

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கடல் சீற்றத்தால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றவர்கள் அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். அதிகாலையில் சூரிய உதயம், மாலையில் அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பதோடு கடல் நடுவே அமைத்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை அதிகமானோர் படகில் சென்று பார்வையிடுகின்றனர். மேலும், சுற்றுலா பயணிகள் பலரும் கட லில் இறங்கி குளிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், கடலில் இறங்க வேண்டாம் எனவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் குமரி கடலோர பகுதிகளில் கள்ளக்கடல் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

தற்போது கன்னியாகுமரி கடலில் ராட்சத அலைகள் எழும்புவதால் கடம் சீற்றத்துடன் காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்கும் வகையில் முக்கடல் சங்கமம் படித்துறை பகுதியில் போலீஸார் தடுப்புகள் அமைத்துள்ளனர். சுற்றுலா பாதுகாவலர்கள் ஒலிபெருக்கி மூலம் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கடலுக்கு செல்ல விடாமல் திருப்பி அனுப்புகின்றனர்.

கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலையில் வழக்கம்போல் விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு படகு சேவை தொடங்கியது. சற்று நேரத்தில் கடல் சீற்றம் அதிகமானதால் விவேகானந்தர் மண்டபத்தில் இறக்கிவிடப்பட்ட சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக மீண்டும் படகில் ஏற்றப்பட்டு கரைக்கு திரும்பினர்.

இதையடுத்து காலை 9 மணிக்கு படகு சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்ல காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். குமரி கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மீறி சென்றவர்களை சுற்றுலா போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x