Last Updated : 12 Oct, 2024 07:31 PM

 

Published : 12 Oct 2024 07:31 PM
Last Updated : 12 Oct 2024 07:31 PM

ஆயுதபூஜை தொடர் விடுமுறை எதிரொலி: சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் களைகட்டிய ஏற்காடு

சுற்றுலாப் பயணிகள்

சேலம்: ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை காரணமாக, ஏற்காடு சுற்றுலா தலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், அங்கு நிலவும் குளுகுளு சூழலில், மகிழ்ச்சியுடன் சுற்றுலா இடங்ளை கண்டு ரசித்தனர்.

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாட்டங்களால், கடந்த 11-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை, பெரும்பாலானவர்களுக்கு விடுமுறையாக அமைந்தது. எனவே, ஆயுத பூஜை கொண்டாட்டங்களை நிறைவு செய்த பலரும், சுற்றுலா தலங்களுக்கு ஆர்வமுடன் சென்றனர். இதில், தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சேலத்தை அடுத்துள்ள ஏற்காடு மலைக்கு, நேற்று தொடங்கி இன்று பகல் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.

பேருந்துகள், கார்கள், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் என பல வித வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வந்ததால், ஏற்காடு மலைப்பாதை மற்றும் ஏற்காட்டில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதேபோல், ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, ஏரித்தோட்டம், தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட பூங்காக்களில் பலர் குடும்பம் குடும்பாக வந்திருந்ததைக் காண முடிந்தது.

இதேபோல், காட்சிமுனைப் பகுதிகளான கரடியூர், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட் ஆகிய இடங்களிலும் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள், மலைகளின் மீது படர்ந்திருந்த மழை மேகக் கூட்டங்களை அழகை கண்டு வியந்ததுடன், பலர் புகைப்படம் மற்றும் செல்ஃபி ஆகியவற்றை எடுத்து, தங்கள் நினைவுகளை பதிவு செய்து கொண்டனர். ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்வதற்காக, சுற்றுலாப் பயணிகள் பலரும் ஆர்வத்துடன் வந்திருந்தனர். இதனால், படகு கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டு, பலரும் காத்திருந்து பின்னர் படகு சவாரி செய்தனர்.

இதனிடையே, ஏற்காட்டில் குளிர் அதிகமாக இருந்ததுடன், வானம் மேகமூட்டத்துடன் இருந்தது, இது சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகத்தை அளித்தது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகம் இருந்ததால், அங்கு தங்கும் விடுதிகள், உணவகங்கள், கடைகள் உள்பட சுற்றுலா சார்ந்த தொழில்கள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதனால், சுற்றுலா தொழில் துறையினர் மகிழ்ச்சியடைந்தனர். ஏற்காடு போலவே, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிலும் பார்வையாளர்கள் வருகை அதிகமிருந்தது. பள்ளிகள் விடுமுறை என்பதால், பெற்றோர் பலரும், தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்ததால், பூங்கா களை கட்டியிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x