Published : 10 Oct 2024 03:48 PM
Last Updated : 10 Oct 2024 03:48 PM

உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் ‘டோனட்’

ஆர்வமுடன் சிற்றுண்டி அருந்தி பயணித்த சுற்றுலா பயணிகள்.

உதகை: மலைகளின் அரசியான உதகைக்கு கோடை சீசன் மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் அதிக அளவில் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, கடந்த 50 ஆண்டுகளாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பல்வேறு சலுகைகள் மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் முக்கியப் பொழுதுபோக்கு இடமாக தாவரவியல் பூங்கா உள்ளது.

இதற்கடுத்து படகுசவாரி பிரசித்தி பெற்றது. உதகை படகு இல்லத்தில் ஏராளமான துடுப்பு, மோட்டார், மிதி படகுகள் உள்ளன. காஷ்மீரில் இருக்கும் சிக்காரி வகை படகுகளும் இங்குள்ளன. இந்நிலையில், இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் கூடிய உதகை படகு இல்லத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்வுடன் சவாரி செய்ய, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலமாக ‘போனட்’ என அழைக்கப்படும் புதிய வகை படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உதகை படகு இல்லத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டோனட் படகு.

இப்படகில் அமர்ந்து சிற்றுண்டி, தேநீர் அருந்திக்கொண்டே சவாரி செய்வதுடன், உதகை ஏரியின் அழகை கண்டு ரசிக்கலாம். இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் குணேஸ்வரன் கூறும்போது, "படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள், விதவிதமான படகுகளில் பயணம் செய்ய விரும்புகின்றனர்.

அவர்களை கவரும் வகையில், பல்வேறு வகை படகுகளை அறிமுகப்படுத்துகிறோம். அந்த வகையில், இப்போது இரண்டு 'டோனட்' வகை படகுகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். டோனட் படகு சவாரி செய்வதற்கு 5 பேருக்கு ரூ.1,200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணத்தில் சிற்றுண்டி, தேநீர் வழங்கப்படும். சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று சிரமப்படாமல், சுலபமாக படகு சவாரிக்கு முன்பதிவு செய்ய இணையதளம் மற்றும் க்யூஆர் குறியீடு முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

இதற்கான க்யூஆர் குறியீடுகள், தொட்டபெட்டா, பைக்காரா, தாவரவியல் பூங்கா, ஒட்டல் தமிழ்நாடு உதகை அலகு I & II, சிம்ஸ் பூங்கா, கர்நாடக பூங்கா ஆகிய முக்கிய சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது" என்றார். டோனட் இனிப்பு வகை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அந்த பெயரில் உள்ள இந்த படகும் சிறுவர் முதல் பெரியவர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x