Published : 27 Sep 2024 09:34 AM
Last Updated : 27 Sep 2024 09:34 AM
உதகை: உதகையில் உள்ள கர்நாடக அரசு பூங்காவில் 2-ம் சீசனை முன்னிட்டு நடவு செய்யப்பட்ட செடிகளில் பூத்துள்ள மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா அரசின் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பூங்கா உள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள மலர்அருவி, கற்களால் ஆன இருக்கைகள், அலங்காரங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உள்ளன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பசுமையான புல்வெளியில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும், நர்சரியில் காட்சிக்கு வைக்கப்பட்ட பூந்தொட்டிகளில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு ரசிக்கின்றனர்.
கோடை சீசன் தவிர, பள்ளி காலாண்டு விடுமுறை காலமான செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உதகைக்கு அதிக அளவில்சுற்றுலா பயணிகள் வருவதால் இரண்டாம் சீசன் களைகட்டும். இதையொட்டி கர்நாடகா அரசுப்பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மலர் பாத்திகளில் இயற்கை உரமிட்டு, செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
சால்வியா, டேலியா, பிகோனியா, பிளாக்ஸ், மேரிகோல்டு, ஜெரேனியம், கேலண்டுலா உட்பட 20-க்கும் மேற்பட்ட ரகங்களைச் சேர்ந்த 80 ஆயிரம் மலர்ச் செடிகள் இங்கு நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவற்றில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT