Published : 26 Sep 2024 09:06 PM
Last Updated : 26 Sep 2024 09:06 PM

உணவு சுற்றுலாவுக்கு பிரபலமாகும் மதுரை: உலக சுற்றுலா தினத்தில் ‘உணவு நடை’க்கு ஏற்பாடு

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: உணவு சுற்றுலாவுக்கு பிரபலமாகி வரும் மதுரையில் உணவு சுற்றுலாவை பிரபலப்படுத்த உலக சுற்றுலா தினமான நாளை ‘உணவு நடை’க்கு சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ‘சுற்றுலாவும், அமைதியும்’ என்ற கருத்து முன்னிறுத்தப்படுகிறது. வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை மாநகரம், இந்தியாவின் பழமையான நகரமாகவும், தமிழகத்தின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கும் சிறப்பு பெற்றது. அதனால், மதுரை மாவட்டம், சுற்றுலா ரீதியாக நாட்டிலே முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது.

மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகர் கோயில், பழமுதிர்சோலை, கூடழகர் கோயில், செயின்ட் மேரி கதீட்ரல், போன்றவற்றிற்காகவும், ஆன்மீக சுற்றுலாவுக்காகவும், திருமலை நாயக்கர் மஹால், காந்தி அருங்காட்சியகம், புதுமண்டபம், கீழக்குயில்குடி கிராமத்தில் சமணர் மலை, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், போன்றவை பொதுவான சுற்றுலாவுக்கும் புகழ்பெற்றவை. இதில், மீனாட்சி கோயில் இந்துக்களுக்கு ஒரு முக்கியமான யாத்திரைத் தலமாகவும், சுற்றுலா பயணிகளுக்கு அதன் கட்டிடக்கலை மதிப்பிற்காகவும் புகழ்பெற்றது.

தமிழகத்தின் பிற நபர்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக மதுரையில் விமான நிலையமும், நாட்டின் அனைத்து மூலைகளில் இருந்து ரயில் வந்து செல்லக்கூடிய மிகப்பெரிய ரயில் நிலையமும் உள்ளது. அதனால், ஆண்டுக்கு 3 கோடி சுற்றுலா பயணிகள் மதுரை வந்து செல்கிறார்கள். பொங்கல் பண்டிகை நாட்களில் தமிழர்களின் திருநாளான இந்த பண்டிகை நிகழ்ச்சிகளிலும், இந்த விழாவை முன்னிட்டு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காணவும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

ஆனால், மதுரையில் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கான சுகாதாரமான குடிநீர், பாதுகாப்பான தங்கும் வசதி, விசாலமான சாலை வசதிகள், வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதிகள், கழிப்பறை வசதிகள் போன்றவை இல்லை. அதனால், ஒரு முறை மதுரை வரும் சுற்றுலா வருவோர் மீண்டும் சுற்றுலா வருவதற்கு தங்குகிறார்கள். அதனால், நாட்டின் முக்கியமான சுற்றுலா தலமான மதுரையில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள் உள்ளது.

தற்போது வழக்கமான ஆன்மீக, பொதுவான சுற்றுலாவை தாண்டி, மதுரைக்கு உணவு சுற்றுலாவுக்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வர ஆரம்பித்துள்ளனர். தற்போது மதுரையின் சிறப்பு, அதன் உணவு வகைகள் என்று சொல்லும் அளவிற்கு, மதுரை வழியாக வெளியூர் செல்ல கூடிய பொதுமக்கள், வாகனங்களை மதுரை நகர் பகுதிக்கு விட்டு இங்குள்ள உணவு வகைகளை ருசித்து சாப்பிட்டு செல்கிறார்கள். இங்கு தமிழர்களின் பாரம்பரியமான உணவு வகைகள், வடமாநில உணவு வகைகள், சுவையான தெரு உணவுகளுக்கு வரவேற்பை பெற்றுள்ளது.

மதுரை இட்லி, கறி தோசை, அசைவ சாப்பாடு, புரோட்டா, ஜிகர் கீரை வடை, பணியாரம், பருத்தி பால், ஜிகர்தண்டா, போன்றவற்றை மதுரை வரும் சுற்றுலா பயணிகள் விரும்பி சாப்பிடுகிறார்கள். உயர்தர மக்கள் சாப்பிடுவதற்கான பிரமாண்ட ஹோட்டல்கள் முதல் சாதாரண உழைக்கும் மக்கள் சாப்பிடக்கூடிய தெரு உணவகங்கள் வரை இங்கு பிரபலமானவை. அதனால், மாவட்ட சுற்றுலாத்துறை, இந்த ஆண்டு உலக சுற்றுலா தினத்தை மதுரையின் பாரம்பரிய, பிரபல உணவுகளை மையப்படுத்தி கொண்டாட உள்ளது. அதற்காக, நாளை சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டு ‘உணவு நடை’ என்ற புதுவிதமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீ பாலமுருகன் கூறுகையில், ‘‘மதுரை தற்போது சுற்றுலாவை தாண்டி, உணவு சுற்றுலாவுக்கு தற்போது வரவேற்பை பெற்றுள்ளது. அதனால், நாளை மாலை 6 மணிக்கு சுற்றுலாத் துறை சார்பில் ‘உணவு நடை’ மூலம் நடந்து கொண்டே மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் பல்வேறு வகை பாரம்பரிய உணவகங்கள், 2கே கிட்ஸ்-க்கு பிடிக்கக்கூடிய நவீன உணவகங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அழைத்து செல்லப்படுகிறார்கள். சுற்றுலாவை வெறும் பொழுதுப்போக்கு அம்சமாக பார்க்க முடியாது.

சுற்றுலா வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தை உயர்த்துவதால் ஒரு நகரத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக திகழ்கிறது. அதனால், தமிழக அரசு உணவு அடிப்படையிலும் மதுரையில் சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும், சுற்றுலாவுக்கான வசதிகளை மேம்படுத்தவும், உள்ளூர் மக்கள் வார விடுமுறை நாட்களில் சினிமா தியேட்டர்களை தாண்டி பொழுது போக்குவதற்கு சிறந்த பொழுதுபோக்கு இடங்களை உருவாக்கவும் சுற்றுலாத்துறை, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x