Last Updated : 26 Sep, 2024 05:02 PM

 

Published : 26 Sep 2024 05:02 PM
Last Updated : 26 Sep 2024 05:02 PM

செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைக்குமா?

செஞ்சிக் கோட்டையின் சிறப்பை அறிந்து, அதற்கான வரலாற்றுச் சிறப்பு அங்கீகாரம் அளிக்க யுனெஸ்கோவின் ஆய்வு குழு நாளை (செப். 27) வருகிறது. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945-ம் ஆண்டு உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தளங்கள் என்றால் அதற்கு கூடுதல் சிறப்பு உண்டு.

அதன் அங்கீகாரம் சர்வதேச பார்வையாளர்களை அந்தப் பகுதிக்கு அழைத்து வரும். நம் நாட்டில் அஸ்ஸாம் வனவிலங்கு சரணாலயம், டெல்லி குதுப்மினார், செங்கோட்டை, தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, அஜந்தா ஓவியங்கள், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், தஞ்சை பெரிய கோயில், மேற்குத்தொடர்ச்சி மலை, நீலகிரி மலை ரயில், கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் உள்ளிட்ட 42 இடங்கள் ஏற்கெனவே யுனெஸ்கோவால் வரலாற்றுச் சிறப்புடன் கூடிய சிறந்த சுற்றுலா மற்றும் பண்பாட்டுச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில் செஞ்சிக் கோட்டைக்கு யுனெஸ்கோ குழு நாளை வருகை தருகிறது. இதையொட்டி கோட்டையைச் சுற்றியுள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு, அருகில் உள்ள தனியார் இடங்களில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கோட்டை வழித்தடங்களை குறிக்கும் தகவல் பலகைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட நிர்வாகத்தால், செஞ்சிக் கோட்டையின் வரலாற்று சிறப்புகள் குறித்த குறும்படம் தயார் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை யுனஸ்கோ குழுவினருக்கு திரையிட்டு காட்ட உள்ளனர். தொகுதி எம்எல்ஏவும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தானிடம் இதுபற்றி கேட்ட போது, “உலகப்புகழ் பெற்ற கோட்டையாக செஞ்சியைப் பதிவு செய்ய யுனெஸ்கோ குழு வருகை தருகிறது.

செஞ்சிக் கோட்டை அகழி சுத்தப்படுத்தப்படுகிறது.

இதற்கான முன்னேற்பாடு பணிகளுக்கு மத்திய தொல்லியல் துறைமுழுமையான ஒத்துழைப்பு அளித்துவருகிறது” என்று தெரிவிக்கிறார். மேலும் இதுதொடர்பாக செஞ்சிபேரூராட்சித் தலைவர் மொக்தியார் அலி மற்றும் செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவர் விஜயகுமார் ஆகியோரிடம் கேட்ட போது, அவர்கள் இணைந்து கூறியது: யுனெஸ்கோ குழு வருகை தருவதையொட்டி, இந்திய தொல்லியல் துறை கூடுதல் இயக்குநர் ஜான்விச் ஷர்மா கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி செஞ்சி கோட்டையில் அமைச்சர் மஸ்தான், ஆட்சியர் பழனி ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்தார்.

அப்போது, சிறப்பு வாய்ந்த இந்த செஞ்சிக் கோட்டையில் மேலும் சில விஷயங்களைச் செய்தால், சிறப்பாக இருக்கும் என்று கூறி மனு ஒன்றை அளித்தோம். அதில், கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க செட்டிக்குளத்தில் படகு சவாரி கொண்டு வர வேண்டும். கோட்டையில் பசுமைச் சூழலை உருவாக்க மிகப்பெரிய தோட்டம் அமைக்க வேண்டும். கோட்டைக்குள் வடிகால் வசதியுடன் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். பிரகாசமாக ஒளி தரக்கூடிய மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.

மேலும் ஆங்காங்கு குடிநீர் வசதி, இருக்கை வசதி மற்றும் கழிப்பறை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். 800 அடி உயரத்தில் உள்ள கோட்டையின் உச்சி வரை அனைவராலும் செல்ல இயலவில்லை. எனவே ரோப் கார் மூலம் ராஜா கோட்டைக்குச் சென்று, அங்கிருந்து ராணி கோட்டைக்கு பயணித்து, அங்கிருந்து கீழே வருவதற்கான வழிவகைகளை ஏற்படுத்திட வேண்டும்.

மேலும் கோட்டையின் கட்டிடக் கலையின் நுணுக்கங்களை கண்டுகளிக்க அனுமதிக்க வேண்டும். இங்கிருக்கும் கல்யாண மஹாலுக்குள் பார்வையாளர்களை அனுமதித்தால் சுற்றுலா பயணிகள் மேலும் மகிழ்வார்கள். மேலும் இப்பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். நடனமாடும் இசை விளக்குகள் ஏற்படுத்திட வேண்டும். கோட்டையைச் சுற்றி இருக்கும் அகழியை தூர்வார வேண்டும். கோட்டையில் உள்ள வேலூர் நுழைவாயிலை சுத்தப்படுத்தி, பொதுபார்வைக்கு அனுமதிக்க வேண்டும். முதியோர், குழந்தைகள் மற்றும் ஊனமுற்றோர் கோட்டையில்

உள்ள குதிரை லாயம், நெற்களஞ்சியம் உள்ளிட்ட பகுதிகளை காண பேட்டரி மூலம் இயக்கப்படும் கார்களை இயக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்து தந்தால், செஞ்சிக் கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்று தெரிவித்திருந்தோம். இக்கோரிக்கைகளை நாளை வர இருக்கும் யுனெஸ்கோ குழுவிடமும் தர இருக்கிறோம். அக்குழுவின் மூலம் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வலியுறுத்துவோம் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x