Published : 21 Sep 2024 09:20 PM
Last Updated : 21 Sep 2024 09:20 PM
கொடைக்கானல்: கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் விற்பனை செய்தால், பயன்படுத்தினால் ரூ.20 பசுமை வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 5 லிட்டருக்கு குறைவான குடிநீர் மற்றும் குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் செல்லும் மலையடிவாரத்தில் சோதனை சாவடி அமைத்தும், கொடைக்கானல் நகருக்குள் நுழையும் போது சோதனை மூலம் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதித்து, பிளாஸ்டிக் பாட்டில்களை விற்பனை செய்யும் தனிநபர், வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கும் வகையில் ஒரு பாட்டில்களுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சனிக்கிழமை மாலை (இன்று) இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி கூறும்போது, “உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 கிராம ஊராட்சிகளின் கிராம சபை கூட்டத்திலும் 5 லிட்டருக்கு குறைவான தண்ணீர் மற்றும் குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள் வைத்திருத்தல், பயன்படுத்துதல், விற்பனை செய்தால் பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு முறை செப்.20-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT