Published : 17 Sep 2024 06:30 AM
Last Updated : 17 Sep 2024 06:30 AM

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மலர்கள் நீலகிரியில் பூத்து குலுங்குகின்றன

உதகை அருகே எப்பநாடு மலைச்சரிவுகளில் பூத்துள்ள குறிஞ்சி மலர்கள்.

உதகை: நீலகிரி மாவட்ட மலைச்சரிவுகளில், 12 ஆண்டுக்கு ஒரு முறை மலரும்குறிஞ்சி மலர்கள் மலர்ந்துள்ளன. இதை பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தின் அடையாளமான குறிஞ்சி மலர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மலையும் மலை சார்ந்த இடமான நீலகிரி மாவட்டத்தில் அபூர்வமாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைபூக்கும் குறிஞ்சி மலர்கள் பூக்கின்றன. கடந்த 2018-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தின் வடக்கு பகுதியான உதகையை அடுத்துள்ள கல்லட்டி, சோலாடா மலைச் சரிவுகளில் குறிஞ்சி மலர்கள் பூத்தன. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் கோடநாடு மலைச்சரிவுகளில் குறிஞ்சி மலர்கள் பூத்தன. தற்போது நீலகிரி மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளான எப்பநாடு, பிக்கப்பத்தி மந்து, கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு மலைச்சரிவுகளில் குறிஞ்சி மலர்கள் பூத்துஅந்த மலைத்தொடரே ஊதா நிறமாக காட்சியளிக்கிறது.

தாவர ஆய்வாளர் கருத்து: கோத்தகிரி ஹெரிடேஜ் அறக்கட்டளை நிர்வாகியும், தாவர ஆய்வாளருமான ஆர்.கண்ணன் கூறியதாவது: தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல், கேரளத்தில் இடுக்கி, மூணாறு உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிக அளவிலான குறிஞ்சி மலர்கள் ஒரே நேரத்தில் பூப்பது குறிப்பிடத்தக்கது.

நீலகிரியில் காணப்படும் குறிஞ்சி மலர்கள் 3, 6, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் தன்மை கொண்டவை. சில ரகங்கள் ஆண்டுதோறும் பூக்கின்றன. இதில், ஸ்டிராபிலான்தஸ் குந்தியானா ரக பூக்கள்12 ஆண்டுக்கு ஒரு முறை நீலகிரிமாவட்டத்தில் அதிகம் காணப்படுபவை. இந்த ரக செடிகளில் அதிகளவில் மலர்கள் மலர்வதால், தேன் அதிகளவு உற்பத்தியாகும்.

இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக குறிஞ்சி மலர்கள் மலரும் பகுதிகளில் தேயிலை விவசாயம் மற்றும் ரிசார்ட்டுகள் பெருக்கத்தால், குறிஞ்சி மலர்கள் பூப்பது குறைந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது நீல குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. ‘ஸ்டிராபிலான்தஸ் குந்தியானா’ என்ற தாவரவியல் பெயரை கொண்டு இந்த மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்பவை. கடல் மட்டத்தில் இருந்து 1600 மீட்டர்முதல் 2500 மீட்டர் வரையிலான உயரமான புல்வெளிகளில் வளரக்கூடியவை.

குறிஞ்சி மலர்களின் விதைகளை எலிகள் மற்றும் காட்டு கோழிகள் உண்ணும். இதனால் இந்த மலர்கள் சிறிதளவில் பூத்தால் எலிகள்மற்றும் காட்டு கோழிகள் விதைகளை உண்டால், அந்த செடிகள் அதோடு அழிந்து விடும். இதனால் இயற்கையாகவே தன்னை காத்துக்கொள்ள அதிகளவில் குறிஞ்சி மலர்கள் பூக்கின்றன. குறிஞ்சி மலர்கள் மலர்ந்ததும் செடிகள் இறந்து விடும்.

தற்போதைய காலகட்டத்தில் தொடர் வன அழிப்பு மற்றும் அந்நிய தாவரங்களின் ஊடுருவல் காரணமாக பல ரக குறிஞ்சி மலர்கள் அழியும் தருவாயில் உள்ளன. குறிஞ்சி செடிகள் குறிப்பிட்ட நிலப்பரப்பில் வளரும் தன்மை கொண்டவை. அந்த நிலப்பரப்பை கண்டறிந்து, இதில் இந்த செடிகளை நடவுசெய்யலாம். ஆனால் இயற்கையாக அவற்றின் வாழ்விடத்தை கண்டறிந்து இந்த நிலப்பரப்பை மேம்படுத்த வேண்டும். அந்த நிலப்பரப்பில் உள்ள அந்நிய தாவரங்களை அகற்றினால் மட்டுமே குறிஞ்சியை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x