Published : 16 Sep 2024 08:01 PM
Last Updated : 16 Sep 2024 08:01 PM

ஸ்ரீவில்லிபுத்தூர் - ரமேஸ்வரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க திட்டம்

சிவகாசி: சிவகாசி, அருப்புக்கோட்டை, பார்த்திபனூர் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் - ராமேஸ்வரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்கள் மதுரை செல்லாமல் ராமேஸ்வரம் செல்ல முடியும்.

இந்தியாவில் பிரசித்தி பெற்ற ஜோதிர்லிங்க தளங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகின்றனர். ராமேஸ்வரம் செல்வதற்கு மதுரை வழியாக செல்லும் கொச்சி - தனுஷ்கோடி சாலையே பிரதான சாலையாக உள்ளது. இதில் மதுரை முதல் பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையாகவும, பரமக்குடி முதல் ராமேஸ்வரம் வரை இரு வழிச்சாலையாகவும் உள்ளது.

விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் மதுரை வந்து கொச்சி - தனுஷ்கோடி சாலை வழியாகவே ராமேஸ்வரம் சென்று வருகின்றனர். விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, பார்த்திபனூர், பரமக்குடி வழியாக சாலை வசதி இருந்தும் சாலை குறுகலாக இருப்பதாலும், பேருந்து வசதி இல்லாததாலும் பொதுமக்கள் மதுரை வழியாகவே ராமேஸ்வரம் சென்று வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்துார் - சிவகாசி - விருதுநகர் - அருப்புக்கோட்டை - நரிக்குடி - பார்த்திபனுார் - பரமக்குடி சாலையை (எஸ்.ஹெச்.42) அகலப்படுத்தி, நான்கு வழிச்சாலையாக ரோட்டினை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

சிவகாசியில் தொடங்க உள்ள சுற்றுச்சாலை திட்டத்துடன் சேர்த்து நான்கு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான சாத்தியக் கூறுகள் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பது குறித்து நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் பாக்கியலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் இன்று (செப்.16) ஆய்வு செய்தனர். இதன்மூலம் தென்காசி, விருதுநகர் மக்கள் மதுரை செல்லாமல் ராமேஸ்வரம் செல்வதுடன், சுமார் 30 கிலோ மீட்டர் வரை பயண தூரம் குறையும். இத்திட்டம் நிறைவேறினால் மதுரை - கொல்லம் மற்றும் கொச்சி தனுஷ்கோடி நான்கு வழிச்சாலைகளை இணைக்கும் வகையில் புதிய நான்கு வழிச்சாலை வழித்தடம் உருவாகும்.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி கூறுகையில், “ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி - விருதுநகர் - அருப்புக்கோட்டை - நரிக்குடி - பார்த்திபனூர் - பரமக்குடி சாலை (எஸ்.ஹெச்.42) வரும் நிதியாண்டில் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த சாலையானது சிவகாசி சுற்றுச் சாலையில் பூவநாதபுரம் விலக்கிலிருந்து பிரிந்து, சிவகாசி - எரிச்சநத்தம் சாலையில் நமஸ்கரித்தான்பட்டி அருகே கடந்து வடமலாபுரம் சோதனை சாவடியில் விருதுநகர் சாலையில் இணையும் வகையில் பணிகள் தொடங்க உள்ளது. இந்த சாலை சந்திப்புகளில் ரவுண்டானா அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது,” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x