Published : 13 Sep 2024 05:49 PM
Last Updated : 13 Sep 2024 05:49 PM
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரம்பரிய சின்னங்களை அறிந்து கொள்ள சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் நெய்தல் மரபு நடை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “தமிழகத்தில் தனித்துவமான நில அமைப்பைக் கொண்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தின், வரலாறு, தொல்லியல் தொன்மங்களுடன், நெய்தல் அழகியலையும் அதன் வாழ்வியலையும் ஒருசேரக் காணும் ஒர் அரிய வாய்ப்பாக, தமிழ்நாடு சுற்றுலாத் துறையும், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும் இணைந்து ராமநாதபுரம் நெய்தல் மரபு நடைப் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.
செப்டம்பர் 14 ,15 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள இந்தப் பயணத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அவர்கள் பாண்டியர், சோழர், சேதுபதி மன்னர்களின் கல்வெட்டு, கட்டிடக்கலைச் சிறப்பு கொண்ட திருப்புனவாசல், சுந்தரபாண்டியன்பட்டினம், தீர்த்தாண்டதானம், தேவிபட்டினம், உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, ஓரியூர், தங்கச்சிமடம் நெடுஞ்சாரப்பா தர்ஹா போன்ற வழிபாட்டுத்தலங்களை காண உள்ளனர்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தின் நெய்தல் நில சூழலை அறிய காரங்காடு, குருசடைத் தீவு, பிச்சைமூப்பன்வலசை ஆகிய இடங்களின் சூழல் சுற்றுலா, அரிச்சல்முனை, தனுஷ்கோடி, நம்புநாயகி கோயில் மணல் மேடுகள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழும் பொந்தன்புளி மரம், முழுவதும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனை ஆகிய வரலாற்று, இயற்கைப் பாரம்பரியப் பெருமை கொண்ட இடங்களையும் காண உள்ளனர், என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT