Published : 02 Sep 2024 06:26 AM
Last Updated : 02 Sep 2024 06:26 AM
தருமபுரி / மேட்டூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று நீர்வரத்து விநாடிக்கு 25,000 கனஅடியாக உயர்ந்துள்ளதால், அருவியில் குளிக்க தடை விதிக் கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், கர்நாடக மாநிலத்தில் உள்ளஅணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் காலை நீர்வரத்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் மாலையில் 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில், நேற்று காலை நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல் அருவிகள் மற்றும் ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவி மற்றும் ஆற்றங்கரையில் பொதுமக்கள் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி உத்தரவிட்டுள்ளார்.
மேட்டூர் அணை: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 6,396 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 19,199 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 14,200 கனஅடி தண்ணீர்வெளியேற்றப்பட்டு வருகிறது.அணையின் நீர்மட்டம் நேற்று 115.82 அடியாகவும், நீர் இருப்பு 86.95 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து சரிந்ததால் குறைந்து வந்த நீர்மட்டம், தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உயரத்தொடங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT