Published : 19 Aug 2024 04:23 PM
Last Updated : 19 Aug 2024 04:23 PM
மதுரை; மதுரைக்கு புதிதாக வரும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக, தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ‘மதுரை டூரிஸம் பாஸ்போர்ட்’ அறிமுகம் செய்துள்ளது. இந்த ‘டூரிஸம் பாஸ்போர்ட்’ சுற்றுலாப் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கியமான ஆன்மிக சுற்றுலா மற்றும் பாரம்பரிய சுற்றுலா ஸ்தலங்களில் மதுரை முக்கியமானது. கன்னியாகுமரி, கொடைக்கானல், ராமேசுவரம் வரக்கூடிய அனைத்து சுற்றுலாப் பயணிகளும் மதுரைக்கு வராமல் செல்ல மாட்டார்கள். தற்போது மதுரை சுற்றுலா ஸ்தலம் என்பதை தாண்டி, உணவு சுற்றுலாவுக்கு புகழ்பெற்று வருகிறது.
அனைத்து வகை, சைவ, அவைச உணவு வகைளில் விதவிதமான நவீன, பாரம்பரிய உணவுகள் வழங்கும் ஹோட்டல்கள் எண்ணிக்கை பெருகிவிட்டது. சுற்றுலாப் பயணிகள் மட்டுமில்லாது, மதுரையை தாண்டி நான்கு வழிச்சாலையில் பிற நகரங்களுக்கு நெடுந்தூரம் செல்லக்கூடிய பொதுமக்கள் கூட, மதுரை நகருக்குள் வந்து தங்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை சாப்பிட்டு செல்கிறார்கள்.
இது தவிர, மதுரையில் தமிழ் பாரம்பரிய முறையில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை விழாவை காணவும், நேரடியாக பங்கேற்கவும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த பண்டிகை நாட்களில் மதுரைக்கு வருகிறார்கள். மேலும், அவர்கள் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் நடக்கும் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டிகளை பார்வையிட்டு செல்கிறார்கள்.
மதுரைக்கு அனைத்து வகை சுற்றுலாக்களுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள், முறையான வழிகாட்டுதல் மற்றும் அனைத்து இடங்களை சுற்றிக் காட்டுவதற்கும் நம்பிக்கை தகுந்த சுற்றுலா வழிகாட்டிகள் இல்லாமலும், மதுரையை பற்றிய தகவல்களும் கிடைக்காமலும் சிரமப்பட்டு வந்தார்கள். இந்த குறையை போக்க தமிழ்நாடு சுற்றுலாத் துறை, மதுரைக்கு புதிதாக வரக்கூடிய வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ‘மதுரை டூரிஸம் பாஸ்போர்ட்’ அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து மதுரை மாவட்ட சுற்றுலா அதிகாரி ஸ்ரீ பாலமுருகன் கூறுகையில், ‘‘மதுரையை பற்றிய அனைத்து வகையான தகவல்களை ஒருங்கிணைத்து 22 பக்கத்தில் அந்த ‘சுற்றுலா பாஸ்போர்ட்’டில் கொடுத்துள்ளோம். பாஸ்போர்ட் இல்லாமல் எப்படி ஒரு வெளிநாட்டுக்கு சுற்றுலாவுக்கு செல்ல முடியாதோ அதுபோல், தற்போது சுற்றுலாப் பயணிகள் இந்த ‘சுற்றுலா பாஸ்போர்ட்’ இல்லாமல் இனி மதுரைக்கு வர மாட்டார்கள். அந்தளவுக்கு, ஒரு பாஸ்போர்ட் வடிவத்தில் மதுரையை பற்றிய அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளோம்.
அதனால், தமிழ்நாடு சுற்றுலாத் துறை, இதனை ‘மதுரை சுற்றுலா பாஸ்போர்ட்’ என்று பெரியிட்டு அறிமுகம் செய்துள்ளோம். இந்த சுற்றுலா பாஸ்போர்ட்டில், மதுரை மாவட்டத்தின் ஒட்டுமொத்த வரைப்படமும், எங்கெங்கு மதுரையில் சாப்பிடலாம், பாரம்பரிய இடங்கள், சுற்றுலா ஸ்தலங்கள், கோவில்கள், சுற்றுலாத் துறை அங்கீகாரம் பெற்ற வழிகாட்டிகள் பட்டியல், அவர்களுடைய தொடர்பு எண்கள், தங்கும் விடுதிகள் மற்றும் மதுரையின் பிரபலமானவைகள் பட்டியலையும் போட்டுள்ளோம். இந்த சுற்றுலா பாஸ்போர்ட்டை மதுரை மேலவெளி வீதியில் உள்ள சுற்றுலா அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு சுற்றுலா தகவல் மையங்களிலும் மதுரைக்கு புதிதாக வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக வழங்குகிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT