Published : 04 Aug 2024 04:47 PM
Last Updated : 04 Aug 2024 04:47 PM
உதகை: சாலை சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டு இருந்த பைக்காரா படகு இல்லம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரபல மலை பிரதேச சுற்றுலா தலமாக அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்திற்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். மேகங்களை உரசும் மலை முகடுகள், இதமான காலநிலை, பசுமையான தேயிலை தோட்டங்கள், காட்சி முனைகள் என பல சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன.
பைக்காரா படகு இல்லம்: உதகை அருகே அமைந்துள்ள பைக்காரா படகு இல்லம் படகு சவாரி செய்ய பிரபல இடமாக உள்ளது. இந்த பைக்காரா அணையானது, உதகை – கூடலூர் சாலையில் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
படகு சவாரி: மலைகள், வனத்திற்கு நடுவே இயற்கை சூழலில் அமைந்துள்ளது பைக்காரா அணை பகுதியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பைக்காரா படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் இங்கு படகு சவாரி செய்வார்கள். இதில் இங்கு இயக்கப்படும் ஸ்பீட் போட்டில் செல்ல சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புவர். சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். பைக்காரா படகு இல்லத்திற்கு, உதகை – கூடலூர் சாலையில் 1.3 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி வழியாக செல்ல வேண்டும்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள படகு இல்லத்திற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் இந்த சாலையை சீரமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் சீரமைப்பு பணிகள் தொடங்கியது இதனால் பைக்காரா படகு இல்லம் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சாலை சீரமைப்பு பணிகள் காரணமாக கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. கோடை சீசன் காலத்தில் பணிகள் நிறைவு அடையாத தால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.தொடர்ந்து பணிகள் கடந்த ஜூன் மாத இறுதியில் முடிந்தது.
பைக்காரா படகு இல்லம் திறப்பு: நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக படகு இல்லம் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த பைக்காரா படகு இல்லம் இன்று முதல் திறக்கப்பட்டு உள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் சாலையை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக பைக்காரா ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால் இந்த ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT