Last Updated : 26 Jul, 2024 05:04 PM

 

Published : 26 Jul 2024 05:04 PM
Last Updated : 26 Jul 2024 05:04 PM

நெல்லை பொருநை அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் எதிர்பார்ப்பு

சென்னை: கீழடி மற்றும் ஒளிரும் திருமலை நாயக்கர் அரண்மனை போல், நெல்லையில் உள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறக்கும் பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ஒளிரும் திருமலை நாயக்கர் அரண்மனை என்ற தலைப்பில் வெளியிட்ட பதிவில், “தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில், பண்டைய மரபுச் சின்னங்கள் அவற்றின் தொன்மை மாறாமல் பேணிப் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார். அதனடிப்படையில் திருமலை நாயக்கர் அரண்மனை, தஞ்சாவூர் மராட்டா அரண்மனை, தரங்கம்பாடி டேனீஷ்கோட்டை ஆகிய வரலாற்றுச் சின்னங்களில் பாதுகாப்பு, மறுசீரமைப்பு பணிகள் ரூ.16.92 கோடியில் நடைபெற்று வருகின்றன.

மேலும், திருமலை நாயக்கர் அரண்மனை நாடகசாலை, பள்ளியறை பகுதிகளில் புனரமைப்பு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. திருமலை நாயக்கர் அரண்மனையில் மேற்குப்புறத்தில் கம்பிவேலி மற்றும் புல்வெளித்தளம் ரூ. 61 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனையின் தொன்மையை பாதுகாக்கும் வண்ணம் அனைத்துத் தளப்பகுதிகளிலும் ஒரே மாதிரியான கற்கள் ரூ.3.73 கோடியில் பதிக்கப்பட்டு வருகின்றன.

திருமலை நாயக்கர் அரண்மனையை நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்கள் பார்வையிட்டு வருகின்றனர். மதுரைக்கு வட இந்தியாவில் இருந்து வருகை தரும் பார்வையாளர்களும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இந்த அரண்மனையைக் கண்டுகளிக்கின்றனர். பகல் நேரம் தவிர்த்து இரவு நேரத்திலும் திருமலை நாயக்கர் அரண்மனையின் எழிலைக் காண்பதற்கு உள் மற்றும் வெளிப்பகுதிகளில் ஒளியூட்டி அழகூட்டுவதற்கு மரபு சார் ஒளிவிளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

திருமலை நாயக்கர் அரண்மனையினை உலகத் தரம் வாய்ந்த வரலாற்றுச் சின்னமாக உயர்த்தும் வகையில் பல்வேறு பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. வருங்கால தலைமுறையினருக்கு இத்தகைய மரபுச் சின்னங்களைத் தொன்மை மாறாமலும் காலம் கடந்து நிலைத்து நிற்கும் வகையிலும் பாதுகாத்து எடுத்துச் செல்வது நமது தலையாய கடமையாகும் என்ற உன்னத நோக்குடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மரபு நம் உரிமை; அதை மீட்டெடுத்தல் தமிழர் தம் கடமை என்ற என்ற உயரிய நோக்கோடு தமிழக அரசு அரசு செயலாற்றி வருகிறது,” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தப் பதிவை மேற்கோள் காட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட பதிவில், “தூங்கா நகருக்கு மேலும் எழில் கூட்டிடும் வகையில் திருமலைநாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது. கண்களைக் கவர்கிறது. சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அதிகம் காணும் பகுதிகளாக கீழடியும், இந்த அரண்மனையும் திகழட்டும். இவற்றைப் போலவே நெல்லை பொருநை அருங்காட்சியகம் திறப்பதற்கான பணிகள் தொல்லியல் துறை சார்பில் விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x