Published : 23 Jul 2024 03:46 PM
Last Updated : 23 Jul 2024 03:46 PM
புதுடெல்லி: இந்தியாவை உலக சுற்றுலாத் தலமாக நிலைநிறுத்த மத்திய அரசு முயற்சி கொள்கிறது என்றும், இது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், முதலீடுகளை ஊக்குவித்து பிற துறைகளுக்கு பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (ஜூலை 23) காலை தாக்கல் செய்தார். அவர் தனது உரையில், "இந்தியாவை உலக சுற்றுலாத் தலமாக நிலைநிறுத்த மத்திய அரசு முயற்சி கொள்கிறது. இது வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், முதலீடுகளை ஊக்குவித்து பிற துறைகளுக்கு பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
பிஹார் மாநிலம் கயாவில் உள்ள விஷ்ணுபாத் ஆலயமும், புத்த கயாவில் உள்ள மகாபோதி ஆலயமும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. விஷ்ணுபாத் கோயில், மகாபோதி கோயில் வழித்தடங்களில் விரிவான வளர்ச்சிப் பணிகளுக்கு ஆதரவளிக்கப்படும். காசி விஸ்வநாதர் கோயில் வழித்தடத்தை மாதிரியாகக் கொண்டு, அவை உலகத் தரம் வாய்ந்த யாத்ரீக மற்றும் சுற்றுலாத் தலங்களாக மாற்றப்படும். இந்துக்கள், பவுத்தர்கள் மற்றும் சமணர்களின் முக்கிய மதத் தலமாக ராஜ்கிர் விளங்குகிறது. ஜைன மத கோயில் வளாகத்தில் உள்ள 20வது தீர்த்தங்கரர் முனிசுவிரதா கோயில் பழமையானது. ராஜ்கிர்ருக்கான விரிவான மேம்பாட்டு முன்முயற்சி மேற்கொள்ளப்படும்.
நாளந்தா பல்கலைக்கழகத்தை அதன் புகழ்பெற்ற நிலைக்கு கொண்டு செல்ல, அதற்கு புத்துயிர் ஊட்டி, ஒரு சுற்றுலா மையமாக அதனை மேம்படுத்த மத்திய அரசு ஆதரவு அளிக்கும். ஒடிசாவின் இயற்கை அழகு, கோயில்கள், நினைவுச்சின்னங்கள், கைவினைத்திறன், வனவிலங்கு சரணாலயங்கள், இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் அழகிய கடற்கரைகள் ஆகியவை ஒடிசாவை ஒரு சிறந்த சுற்றுலா தலமாக ஆக்குகின்றன. அவற்றின் வளர்ச்சிக்கு எங்கள் அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT