Published : 08 Jul 2024 07:23 PM
Last Updated : 08 Jul 2024 07:23 PM

மதுரை அருகே புதுப்பொலிவு பெறும் சாத்தையார் அணை: சுற்றுலாப் பயணிகளை கவர ரூ.1.10 கோடியில் பணிகள்

மதுரை: மதுரை அருகே சுற்றுலாப் பணிகளை கவரும் வகையில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் சாத்தையார் அணை புதுப்பொலிவுப்படுத்தும் பணிகள் தொடங்கி நடக்கிறது.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது சாத்தையார் அணை உள்ளது. இந்த அணை 29 அடி கொள்ளளவு கொண்டது. கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த அணை 2500 ஏக்கர் பரப்பளவிற்கு பாசன வசதியை தருகிறது. இந்த அணைக்கு சிறுமலை வயிற்றுமலை செம்போத்து கரடு, ஆகிய பல்வேறு பகுதிகளிலிருந்து மழை நீர் வரத்து உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து சாத்தையார் அணை நீர் நிரம்பி விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.44 கோடி மதிப்பில் புதிய ஷட்டர்கள் பொருத்துவதற்கான திட்ட மதிப்பு தயார் செய்யப்பட்டது. அதன்படி புதிதாக ஷட்டர்களும் பொருத்தப்பட்டது. பொருத்தப்பட்ட ஒன்றிரண்டு வருடங்களிலேயே ஷட்டர் பழுதுபட்டு பெரிய அளவில் ஓட்டை விழுந்து அதிலிருந்து தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் வீணாகி வந்தது. இந்த குறைபாடுகளை போக்கி மறுசீரமைப்பு மேற்கொள்ள சாத்தியார் பாசனப்பகுதி விவசாயிகள் அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் சோழவந்த சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோரிடம் தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் பொதுப்பணித் துறை சார்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ரூ.1.10 கோடி மதிப்பில் புதிதாக தரமான ராட்சத ஷட்டர்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. மேலும், இந்த ஷட்டர்களை தூக்குவதற்கு ஏற்கனவே இருந்த ஜெனரேட்டர்கள் பழுதுபட்ட நிலையில் உள்ளது. அவற்றையும் மாற்றி விட்டு புதிதாக அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்ட மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக மினி கொடைக்கானல் போன்று இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக திகழக்கூடிய சாத்தையார் அணை திகழ்கிறது.

தற்போது மேலும் பொதுமக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் சாத்தையார் அணைப்பகுதியில் வண்ண மின் விளக்குகளும் பொருத்தும் பணிகள் நடக்கிறது. மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்கள் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி பாசன விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுப் பணித்துறைக்கும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x