Published : 28 Jun 2024 05:42 PM
Last Updated : 28 Jun 2024 05:42 PM
கொடைக்கானல்: கொடைக்கானல் அருகேயுள்ள புல்லாவெளி அருவி, கொட்டுவரை அருவி மற்றும் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நங்காஞ்சியாறு அணை சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் என மானியக் கோரிக்கையில் அறிவித்துள்ளதால் திண்டுக்கல் மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு நனவாகப்போகிறது.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி அருகே ஆபத்து மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது புல்லாவெளி அருவி. ஆடலூர், பன்றிமலையில் பெய்யும் மழை புல்லாவெளியில் அருவியாக கொட்டுகிறது. இந்த அருவியில் இருந்து செல்லும் தண்ணீர், திண்டுக்கல் மாநகராட்சி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தை சென்று சேருகிறது. அருவியில் தண்ணீர் கொட்டும் அழகை அருவியின் மேற்பரப்பில் இருந்து மட்டுமே கண்டு ரசிக்க முடியும்.
பல நூறு அடி கீழே இறங்கிச் சென்றால்தான் அருவியில் குளிக்க முடியும். ஆனால், ஆபத்து நிறைந்துள்ளதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தடையை மீறி இளைஞர்கள் அருவிக்குச் சென்று குளித்து வருகின்றனர். இதுவரை இந்த அருவியில் 14 பேர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
100 ஆண்டுகளுக்கு முன்பு புல்லாவெளி அருவியை கண்டுபிடித்த ஆங்கிலேயேர்கள் மரத்தால் அமைத்த தொங்கு பாலத்தை கடந்துதான் அருவிக்கு செல்ல வேண்டும். இப்பாலத்தை இப்பகுதியினர் ‘ஆடு’ பாலம் என்றும் அழைக்கின்றனர். போதிய பராமரிப்பின்றி பாலம் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது.
இயற்கை சூழல் நிறைந்த இப்பகுதி வெளி மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதேபோல், ஆபத்தும், அழகும் நிறைந்த கொடைக்கானல் அருகேயுள்ள கொட்டுவரை அருவியையும் பாதுகாப்புமிக்க சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என்று நீண்ட காலமாக மக்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது.
நங்காஞ்சியாறு அணை: ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையக்கோட்டை ஊராட்சிக்கு அழகையும், வளத்தையும் சேர்ப்பது நங்காஞ்சியாறு தான். ஒட்டன்சத்திரம் பரப்பாலாறு அணைக்கு பாச்சலூர், வடகாடு, புலிக்குத்திக்காடு பகுதிகளில் இருந்து தண்ணீர், விருப்பாச்சி மலைக்குன்று வழியாக தலையூத்தில் அருவியாக கொட்டுகிறது. மலையடிவாரத்தில் இருந்து பல நூறு கி.மீ. தூரத்துக்கு நங்காஞ்சியாறு ஓடுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வழிந்தோடும் நீரை தேக்கி வைக்க ஒட்டன்சத்திரம் அருகே வடகாட்டில் பரப்பலாறு அணை கட்டப்பட்டது. அணை நிரம்பிய பின் திறந்து விடப்படும் நீரால் 50-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பிய பின் ஆறு, ஓடை வழியாக கரூர் மாவட்டப் பகுதிக்கு சென்று அமராவதி ஆற்றில் கலந்து கடலில் சென்றடைகிறது. இதை தடுக்க, நங்காஞ்சியாற்றின் குறுக்கே ரூ.41.67 கோடி மதிப்பில் 2008-ல் அணை கட்டப்பட்டது.
இந்த அணையின் மூலம் இடையக்கோட்டை ஊராட்சியில் 1,500 ஏக்கர், வலையபட்டி ஊராட்சியில் 775 ஏக்கர், சின்னக்காம்பட்டி ஊராட்சியில் 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது தவிர, கரூர் மாவட்டத்தில் 3,600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 300-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது.
தற்போது போதுமான பராமரிப்பின்றி அணை பகுதி முழுவதும் முட்செடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. விடுமுறை நாட்களில் அணைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அதனால் அணையை சுற்றுலா தலமாக மேம்படுத்தி, இங்கு வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கனவு நனவாகிறது: இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், சட்டப்பேரவை சுற்றுலா துறை மானியக் கோரிக்கையில் ரூ.10.20 கோடியில் கொடைக்கானல் அருகேயுள்ள புல்லாவெளி அருவி, கொட்டுவரை அருவி, ஒட்டன்சத்திரம் நங்காஞ்சியாறு அணை, மதுரை குட்லாடம்பட்டி அருவி, திருச்சி புளியஞ்சோலை அருவியில் ரூ.10.20 கோடியில் பல்வேறு வசதிகளுடன் சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் தங்களின் நீண்ட கால கனவு நனவாகப்போகிறது என்பதால் திண்டுக்கல் மாவட்ட மக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT