Published : 13 Jun 2024 03:58 PM
Last Updated : 13 Jun 2024 03:58 PM

முட்டுக்காடு படகு குழாமில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தல்

முட்டுக்காடு: முட்டுக்காடு படகு குழாமில் சுற்றுலாப் பயணிகள், குழந்தைகளுடன் வருவது அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் குடிநீர் வசதியோ, கோடை வெப்பத்தில் இருந்து காக்க போதிய வெயில் தடுப்பு வசதிகளோ இல்லாததால், இங்கு படகு சவாரிக்கு வரும் குழந்தைகள், பெற்றோர், முதியோர் தவிக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் தமிழக சுற்றுலாத் துறை சார்பில் படகு குழாம் செயல்பட்டு வருகிறது.

இங்கு கடல் நீரில் சென்று ரசிக்க மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள், கால்மிதி படகுகள் போன்ற சேவைகள் உள்ளன. சாதாரண நாட்களில் சுமார் 300 பேர் வருவார்கள். வார விடுமுறை நாட்களில் ஆயிரம் பேர் வரை வருகின்றனர். முட்டுக்காடு படகு இல்லத்தில், 2022–23-ம் நிதி ஆண்டில் 2,82,142 சுற்றுலாப் பயணிகள் சாகச படகு சவாரி செய்தனர். 2023–24-ம் நிதி ஆண்டில் ஏப்ரல் வரை 1,17,922 பயணிகள் சாகச படகு சவாரி செய்துள்ளனர். சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு நல்ல வருவாய் ஈட்டித் தரும் இப்படகு குழாமில் போதிய அடிப்படை வசதிகள்தான் இல்லை.

மேலும் இங்கு, சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ரூ.16.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திரிகரிப்பு நிலையம் முறையான பராமரிப்பின்றி பயனற்று கிடக்கிறது. இந்நிலையில், முட்டுக்காடு படகு குழாமில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என 'இந்து தமிழ் திசை' வாசகரான சென்னை நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த பாலாஜி என்பவர், 'உங்கள் குரல்' பகுதிக்கு, தொலைபேசி வாயிலாக புகார் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: முட்டுக்காடு படகு குழாமில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான ஏற்பாடுகள் எதுவும் செய்யப் படவில்லை. படகு கட்டணம் ரூ.125 தவிர உள்ளே நுழைவதற்கே ரூ.10 கட்டணம் வசூலிக்கிறார்கள். இது தவிர பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும். இங்குள்ள அனைத்து படகுகளும் பழைய படகுகளாக உள்ளன. சில படகுகள் பழுதடைந்துள்ளன. சுற்றுலாப் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் கூட போதிய அளவில் இல்லை. கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.

குடிநீர் வசதியும் இல்லை. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு ௭ன்ன தயக்கம் என்ற கேள்வி எழுகிறது. மேலும், படகுகளை இயக்குபவர்கள் சுற்றுலாப் பயணிகளிடம் பணம் கேட்டு நச்சரிக் கின்றனர். ஏன் பணம் கேட்கிறீர்கள்? உங்களுக்கு தான் ஊதியம் தருகிறார்களே என கேட்டபோது எங்களுக்கு ஊதியம் தருவதில்லை; ஒரு படகுக்கு ரூ.60 தருகின்றனர்.

இது எங்களுக்கு போதவில்லை, அதனால்தான் உங்களிடம் கேட்கிறோம் என தெரிவிக்கின்றனர். சிலர் அடாவடியாக பணம் கேட்டு தொல்லை கொடுக்கின்றனர்; சிலர் கொடுப்பதை வாங்கிக் கொள்கின்றனர். இது சுற்றுலாப் பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக 'இந்து தமிழ் திசை' சார்பில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில்,தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் சுமார் ரூ.16.50லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பு, பிளாஸ்டிக் பாட்டில்களை தூளாக்கும் இயந்திரம், காற்றில் இருந்து குடி நீர் தயாரிக்கும் இயந்திரம் ஆகியவை பராமரிப்பின்றி வீணாக கிடக்கின்றன. படகுகள் சேதமடைந்து பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் 2 வாட்டர் ஸ்கூட்டர்கள் பழுதடைந்துள்ளது. அவற்றை சரி செய்யாமல் வைத்துள்ளனர். குடிநீருக்கு 2 டேங்க் வைக்கப்பட்டுள்ளன; ஆனால் அவற்றில் தண்ணீர் இல்லை. சிறுவர்களுக்கு லைப் ஜாக்கெட் இல்லை. பெரியவர்களுக்கு போடும் லைப் ஜாக்கெட்டையே சரி செய்து போடுகின்றனர். விபத்து ஏற்பட்டால் சிறுவர்களை காப்பாற்ற முடியாது. இருக்கை வசதிகள் குறைவாக உள்ளன உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத படகு இயக்குபவர்கள் சிலர் கூறியதாவது: ஒரு முறை படகில் பயனிகளை அழைத்து செல்லும்போது கையால் இயக்கப்படும் படகுக்கு 65 ரூபாயும், மற்ற படகுகளுக்கு 60 ரூபாயும் கொடுக்கின்றனர். எங்களுக்கு இது போதவில்லை. சவாரிக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு கொடுக்க நிர்வாகத்துக்கு மனம் இல்லை. விடுமுறை மற்றும் வார நாட்களில் மட்டுமே கூட்டம் வரும். மற்ற நாட்களில் 100 பேர் கூட வருவது இல்லை. எனவே எங்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு எங்களுக்கு மாத சம்பளம் வழங்க அரசு முன்வர வேண்டும்.

மேலும், கடந்த டிசம்பர் மாதம் பெய்த மிக்ஜாம்புயல் மழை காரணமாக, மழைநீர் கடலில் விரைவாக செல்ல முகத்துவார பகுதி ஆழப்படுத்தப் பட்டது. இதனால் எப்போதும் நீர் நிறைந்து காணப்படும் முட்டுக்காடு பகுதி தற்போது நீர்வற்றி ஆங்காங்கே மணல் திட்டுகளாக காட்சியளிக் கிறது. இதன் காரணமாக படகுகளை சரிவர இயக்க முடியவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி கூறியதாவது: சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வரும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே ஆய்வு மேற்கொண்டபோது சில குறைகள் இருப்பதை கண்டறிந்து அவற்றை சரி செய்ய அறிவுறுத்தியிருக்கிறேன். படகுகள் பழுதாகி இருந்தால் அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப் படும். ஆண்டுக்கு 25% புதிய படகுகள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் பொதுமக்களை அதிகளவில் கவரும் வகையில் பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகனன் கூறும்போது, முட்டுக்காடு படகு குழாமை முற்றிலும் பராமரிப்பது சுற்றுலாத் துறைதான். இதில் ஊராட்சி நிர்வாகத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x